விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே காணாமல்போன சிறுமியின் வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகேவுள்ள ஆலம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த 7 வயது சிறுமி, கடந்த 11ஆம் தேதி இரவு பிறந்தநாள் கொண்டாட்டத்தை முடித்துவிட்டு உறங்கிக்கொண்டிருந்தார். வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த சிறுமி நள்ளிரவில் திடீரெனக் காணாமல் போனார்.
சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், 3 துணைக் காவல் கண்காணிப்பாளர்கள் தலைமையில் 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் தேடி வந்தனர்.
தனிப்படை போலீசார், அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்தும், சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் இருந்த 600 கைப்பேசி உரையாடல்களைக் கொண்டும் விசாரணையை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில், கடந்த 10 நாள்களாக நடைபெற்ற விசாரணையில், சிறுமி குறித்த எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை.
இதைக் கண்டித்து, தி.மு.க.வின் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு இன்று மாற்றப்பட்டது. வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் விழுப்புரம் போலீசார் சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகளிடம் இன்று ஒப்படைத்தனர்.