எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

மாநில அரசு கேட்கும் நிதியை மத்திய அரசு கொடுப்பதில்லை! – எடப்பாடி பழனிசாமி

மாநில அரசு கேட்கும் நிதியை மத்திய அரசு கொடுப்பதில்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

சேலம் மாவட்டம் எடப்பாடி பேருந்து நிலையம் அருகே அ.தி.மு.க. சார்பில் அமைக்கப்பட்டுள்ள நீர்மோர் பந்தலை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று காலையில் திறந்துவைத்தார். அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தபோது அவர் கூறியதாவது:

”தமிழ்நாடு அரசு கேட்கும் நிதியை மத்திய அரசு கொடுப்பதில்லை. எப்போதும் கேட்கப்படும் நிதியை விட குறைந்த அளவு நிதியையே மத்திய அரசு அளிக்கும். அ.தி.மு.க. ஆட்சியிலும் மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை. மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆண்டபோதும் நிதியைக் குறைத்துதான் வழங்கினார்கள். தி.மு.க. மத்தியில் அதிகாரத்தில் இருந்தபோதுகூட கேட்ட நிவாரணம் கிடைக்கவில்லை.

குடிமராமத்து திட்டம் அரசியல் காழ்ப்புணர்ச்சியால் தி.மு.க. ஆட்சியில் நிறுத்தப்பட்டது. அ.தி.மு.க ஆட்சியில் பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் இருந்த 14 ஆயிரம் ஏரிகளில் 6 ஆயிரம் ஏரிகள் தூர்வாரப்பட்டன. தமிழகத்தில் போதைப்பொருள்களால் சமுதாயம் மிக மோசமான அழிவுக்குச் சென்று கொண்டிருக்கிறது. போதைப்பொருள் விவகாரத்தில் இரும்புக்கரம் கொண்டு அடக்காமல் அரசு அலட்சியம் காட்டி வருகிறது.”என்றவரிடம்,

பிரதமர் மோடியின் வெறுப்பு பேச்சுத் தொடர்பாக தேர்தல் ஆணையம் பா.ஜ.க.வுக்கு நோட்டீஸ் அனுப்பியது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு, “தேர்தல் விதிமுறை அமலில் இருப்பதால் அது பற்றிப் பேச இயலாது.” என்றார்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com