தி.மு.க. எம்.பி.கள் கூட்டம்
தி.மு.க. எம்.பி.கள் கூட்டம்

தமிழக கட்டமைப்பு திட்டங்களுக்கு மைய அரசு தடைக்கல் - தி.மு.க. எம்.பி.கள் குற்றச்சாட்டு!

தமிழ்நாட்டு உட்கட்டமைப்புத் திட்டங்களுக்கு மத்திய அரசு தடைக்கல்லை ஏற்படுத்தி வருவதாக தி.மு.க. எம்.பி.கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம், சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது.

அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மான விவரம்:

”காவிரி நதிநீர் பிரச்னையில் நடுவர் மன்றமும், உச்சநீதிமன்றமும் அளித்துள்ள தீர்ப்புகளை பொருட்படுத்தாமல், மழை குறைபாட்டைக் காரணம் காட்டி, தமிழ்நாட்டின் பங்கான நீரை கர்நாடக மாநிலம் விடுவிக்காததால் குறுவைப் பயிர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, சம்பா பயிரும் கேள்விக்குறியாகி உள்ளது. எனவே உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி தமிழகத்திற்கு சேரவேண்டிய நீரை உடனடியாக விடுவிக்குமாறு கர்நாடக அரசுக்கு ஒன்றிய அரசு வலியுறுத்த வேண்டும்.

“ஒன்றியத்தில் பா.ஜ.க. அரசு பொறுப்பேற்றதிலிருந்து, தமிழ்நாட்டிற்கான திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை முடக்கி வைத்திருப்பது போல் - இரண்டாவது கட்ட சென்னை மெட்ரோ ரயில் பணிக்கான நிதிஒதுக்கீட்டையும் செய்யவில்லை. முதலமைச்சர் பிரதமரின் முதல் சந்திப்பிலேயே வலியுறுத்தியும், இன்றுவரை ஒன்றிய அரசின் அமைச்சரவைக் கூட்டத்தில் வைக்காமல் இழுத்தடித்து, தமிழ்நாட்டு உட்கட்டமைப்புத் திட்டங்களுக்கு ஒன்றிய அரசு தடைக்கல்லை ஏற்படுத்தி வருகிறது.

பா.ஜ.க. ஆட்சியில் கொண்டுவரப்பட்ட நீட் தேர்வால், தமிழ்நாட்டில் தற்கொலைகள் அதிகரித்து வருகிறது. நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்க மசோதாவை இரண்டு முறை ஒருமனதாக நிறைவேற்றி, குடியரசுத் தலைவருக்கு அனுப்பிவைத்த பிறகும் - ஒன்றிய அரசு அந்த மசோதாவிற்கு இன்னும் ஒப்புதல் அளிக்காமலேயே இருப்பது பா.ஜ.க. ஆட்சி தமிழ்நாட்டிற்குச் செய்துவரும் மாபெரும் துரோகம். நீட் தேர்வு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க தொடர்ந்து நாடாளுமன்றத்தில் தி.மு.க. குரல் எழுப்பும்.

நாடாளுமன்றத்திலும், சட்டமன்றங்களிலும் 33 விழுக்காடு மகளிருக்கு பிரதிநிதித்துவம் அளிக்கும் மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் வலுவாக குரல் எழுப்ப முடிவு செய்துள்ளோம்.

ஒன்றிய பா.ஜ.க. அரசால் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட “விஸ்வகர்மா யோஜானா” திட்டம், குலத் தொழிலை ஊக்குவிக்கும் வகையிலான நடைமுறைகளை வகுத்து, அதிலும் குறிப்பாக 18 வயது நிறைந்துள்ளவர்களை கல்லூரிக்கு செல்ல விடாமல், பரம்பரை தொழிலையே செய்யத் தூண்டும் குலத்தொழிலை மேலோங்கச் செய்யும் திட்டமிட்ட சூழ்ச்சி. இத்திட்டத்தையும் எதிர்த்து நாடாளுமன்றத்தில் கழக உறுப்பினர்கள் குரலெழுப்புவார்கள்.” என்று தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் கூட்டத்தில் முடிவுசெய்யப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com