கனிம வளங்களை வெளி மாநிலங்களுக்குக் கொண்டுசெல்லத் தடை இல்லை!

Chennai High Court
சென்னை உயர்நீதிமன்றம்
Published on: 

தமிழகத்திலிருந்து கருங்கல், ஜல்லிக் கற்கள் உட்பட்ட கனிமங்களை வெளி மாநிலங்களுக்குக் கொண்டுசெல்ல தமிழக அரசு விதித்த தடையை சென்னை உயர்நீதிமன்றம் இரத்து செய்துள்ளது.

தமிழகத்தின் உட்கட்டமைப்புப் பணிகளுக்குத் தேவையான கருங்கல், ஜல்லிக்கற்கள் போன்ற கட்டுமானப் பொருட்களின் தடையற்ற விநியோகத்தை உறுதிசெய்ய, தமிழ்நாடு சட்டவிரோத கனிமச் சுரங்கம், கனிமப் போக்குவரத்து, சேமிப்பு, தடுப்புத் திருத்த விதிகளில் கடந்த ஜூலை மாதம் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.

அதன்படி, கருங்கல், ஜல்லிக்கற்கள் போன்ற கனிம வளங்களை வெளி மாநிலங்களுக்குக் கொண்டுசெல்ல மூன்று மாதங்களுக்கு தமிழக அரசு தடை விதித்தது.

இந்நிலையில், இந்தத் தடை உத்தரவை இரத்துசெய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, இதுபோன்ற திருத்த விதிகளுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற வேண்டும் என்றும், உரிய உரிமம் பெற்று எடுக்கப்பட்ட கனிமங்களை எங்கு விற்க வேண்டும் என முடிவெடுக்க மனுதாரருக்கு உரிமை உள்ளதால், தமிழக அரசின் மூன்று மாதத் தடை உத்தரவு செல்லாது என்ற மனுதாரரின் வாதத்தை ஒப்புக்கொண்டனர்.

மேலும், தடைவிதிக்க வழிவகை செய்த தமிழ்நாடு சட்டவிரோத கனிமச் சுரங்கம், கனிமப் போக்குவரத்து, சேமிப்பு, தடுப்புத் திருத்த விதிகள் அரசியல் சாசனத்திற்கு விரோதமானது என்றும், தமிழக அரசின் தடையை இரத்துசெய்தும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram