சென்னை மெட்ரோ ரயிலில் சர்ச்சைக்குரிய விளம்பரம் அகற்றப்பட்டது என்றும் சம்பந்தப்பட்ட நிறுவனம் மன்னிப்பு கோரியது என்றும் மதுரை எம்.பி. வெங்கடேசனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மெட்ரோ ரயில்களில் இடம்பெற்றிருந்த சர்ச்சைக்குரிய விளம்பரம் தொடர்பாக சிஐடியு, மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் உ.வாசுகி உட்பட பலரும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். வெங்கடேசனும் கடந்த 5ஆம் தேதி சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநருக்கு இதுகுறித்து கடிதம் அனுப்பினார்.
அதற்கு அந்நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் ஆஷிஷ் சட்டர்ஜி அளித்துள்ள பதிலில், சம்பந்தப்பட்ட விளம்பரத்தின் உள்ளடக்கம் வேறுபட்ட பொருளை ஏற்படுத்தியதாகவும், அது பொருத்தமற்றதாக இருந்ததைத் தொடர்ந்து 5ஆம் தேதி அன்றே விளம்பரம் உடனடியாக அகற்றப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், விளம்பரத்தை வெளியிட்ட திருவள்ளுவர் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் கூட்டுறவு கடன் சங்கம் (THECOS) நிறுவனத்திடம் இவ்விவகாரம் தொடர்பாக சென்னை மெட்ரோ நிர்வாகம் விளக்கம் கேட்டதுடன், சம்பந்தப்பட்ட விளம்பர முகமையின் நடவடிக்கையும் தீவிரமாக எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
”எதிர்காலத்தில் இதுபோன்ற சர்ச்சைக்குரிய விளம்பரங்கள் இடம்பெறாத வகையில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தனது விளம்பரக் கட்டுப்பாட்டு நடைமுறைகளை மேலும் வலுப்படுத்த வேண்டும்.” என்று சு. வெங்கடேசன் கூறியுள்ளார்.