சென்னையில் மட்டும் இந்த ஆண்டு ஆன்லைன் பார்சல் மோசடி போன்ற சைபர் குற்றங்கள் மூலமாக பொதுமக்கள் ரூ.132.46 கோடி பணத்தை இழந்துள்ளதாக சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாகப் பெருநகர சென்னை காவல்துறை சார்பில் எக்ஸ் சமூக ஊடகத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில், “இந்தியாவில் கடந்த சில மாதங்களாக வயதானவர்கள் சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் உள்ள நபர்கள், பெண்களைக் குறிவைத்து அடையாளம் தெரியாத தொலைப்பேசி எண்களில் இருந்து பெட்டெக்ஸ் (FEDEX) புளுடார்ட் (BLUEDART) கொரியர் நிறுவனங்களில் இருந்து பேசுவதுபோல் தொடர்பு கொள்கின்றனர். அப்போது உங்களுடைய பெயரை குறிப்பிட்டு உங்களுடைய ஆதார் எண்ணைப் பயன்படுத்தி இந்தியாவிலிருந்து வெளிநாட்டிற்குப் புலித்தோல் போதைப் பொருட்கள், வெளிநாட்டு கரன்சிகள் சிம் கார்டுகள், போலி பாஸ்போர்ட்கள் மற்றும் சில கடத்தல் பொருட்கள் கொண்ட பார்சல் வந்திருப்பதாகவோ கூறுகின்றனர்.
அதோடு டிராய் (TRAI) எனப்படும் இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தில் இருந்து பேசுவதாகக் கூறி நம்முடைய பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ள செல்போன் எண்ணை பயன்படுத்தி பல வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டு அதன்மூலம் பல கோடி ரூபாய்க்கு ஹவாலா பணப்பரிமாற்றம் நடைபெற்றுள்ளதாகவும் தெரிவித்து, அதுசம்மந்தமாக மும்பை சைபர் கிரைம் போலீஸ், சிபிஐ, குற்ற பிரிவு போலிசார் விசாரணை செய்ய வேண்டியதிருப்பதாகவும் கூறி மோசடியில் ஈடுபடுவார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.