Mahavishnu
மகாவிஷ்ணு

அமெரிக்காவில் இருந்து முதல்வரைப் பதிலளிக்க வைத்த மகாவிஷ்ணுவின் அரசுப் பள்ளி ஆன்மீக பேச்சு…

Published on

சென்னையில் உள்ள அரசுப் பள்ளிகளில் ஆன்மிக சொற்பொழிவுகள் நடத்தப்பட்டிருப்பது சர்ச்சையாகி உள்ள நிலையில், “அறிவியல் வழியே முன்னேற்றத்துக்கான வழி” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

சென்னை அசோக் நகர், சைதாப்பேட்டை பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளிகளில், பரம்பொருள் அறக்கட்டளை என்ற பெயரில் தொண்டு நிறுவனம் நடத்தி வரும் மகாவிஷ்ணு என்பவர் ஆன்மிக சொற்பொழிவு நடத்த அழைத்து வரப்பட்டுள்ளார். ‘தன்னை உணர்ந்த தருணங்கள்' என்ற தலைப்பில் அவர் பேசும்போது, "போன ஜென்மத்தில் நீங்கள் செய்த பாவத்தின் அடிப்படையில் இந்த ஜென்மத்தில் பிறவி எடுத்துள்ளீர்கள். அதனால் தான் ஒருவர் கோடீஸ்வரனாகவும் ஒருவர் ஏழையாகவும் பிறக்கிறார். நம் நாட்டில் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட குருகுலங்கள் இருந்தன. அவை அனைத்தும் அழிக்கப்பட்டன. ஒரு மந்திரத்தை படித்தால் நெருப்பு மழை பொழியும். ஒரு மந்திரத்தை படித்தால் நோய்கள் குணமாகும். ஒரு மந்திரத்தை படித்தால் பறந்து போகலாம். அத்தனை மந்திரங்களும் பனையோலையில் எழுதப்பட்டிருந்தது. பிரிட்டிஷார் இதை அனைத்தையும் அழித்து விட்டனர்." என்று அவர் பேசிக் கொண்டிருந்த போது குறுக்கிட்ட ஆசிரியர் ஒருவர், "இது ஆன்மிக சொற்பொழிவா? கர்மா பற்றி பேசிக் கொண்டிருக்கிறீர்கள். என்ன நடக்கிறது இங்கே?” என எதிர்ப்பு தெரிவித்தார்.

கேள்விகேட்ட ஆசிரியருடன் வாக்குவாதத்தில் ஈடும்படும் மகாவிஷ்ணு
கேள்விகேட்ட ஆசிரியருடன் வாக்குவாதத்தில் ஈடும்படும் மகாவிஷ்ணு

அதற்கு மகாவிஷ்ணு, “பாவம் புண்ணியங்களைப் போதிக்காமல் ஒருவருக்கு எப்படி வாழ்வியலை போதிக்க முடியும்" என்று பதிலளித்தவர், “உங்களுக்கு விருப்பம் இல்லை என்றால் என்னை அழைத்திருக்கக் கூடாது. எதற்கு சண்டைக்கு வருகிறீர்கள்?” என்று அரசுப் பள்ளி ஆசிரியரை அவர் கடுமையாகப் பேசுகிறார்.

இது தொடர்பான வீடியோ சமூக ஊடகத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

பள்ளிகளில் அறிவியலையும், பகுத்தறிவையும் போதிப்பதற்கு மாறாக, மூடநம்பிக்கையை விதைக்கும் நிகழ்ச்சியை நடத்துவதற்கு பள்ளிக்கல்வித்துறை எப்படி அனுமதி அளித்தது என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்த நிலையில், இன்று காலை அசோக் நகர் பள்ளிக்கு எதிராக இந்திய மாணவர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பள்ளிக்கு நேரில் வந்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

முதலமைச்சர் முக ஸ்டாலின்
முதலமைச்சர் முக ஸ்டாலின்

இந்த சம்பவம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் தளத்தில், “மாணவச் செல்வங்கள் அறிந்துகொள்ளத் தேவையான சிறந்த அறிவியல் சிந்தனைகள் தரம் மிகுந்த நமது பாடநூல்களில் இடம் பெற்றுள்ளன.

எதிர்காலச் சவால்களை, தன்னம்பிக்கையோடு எதிர்கொள்ளவும், அறிவாற்றலைக் கூர்மைப்படுத்திக் கொள்ளவும் தேவையான சிறப்பான கருத்துகளை ஆசிரியர்களே எடுத்துக்கூற முடியும். அதற்குத் தேவையான புத்தாக்கப் பயிற்சியை, சமூகக் கல்வியை - தக்க துறைசார் வல்லுநர்கள், அறிஞர் பெருமக்களைக் கொண்டு வழங்கத் தேவையான முயற்சிகளைப் பள்ளிக்கல்வித் துறை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழ்நாட்டின் எதிர்காலச் சந்ததியினரான நம் பள்ளிக் குழந்தைகள் அனைவரும், முற்போக்கான - அறிவியல் பூர்வமான கருத்துகளையும் வாழ்க்கை நெறிகளையும் பெற்றிடும் வகையில், மாநிலத்தில் உள்ள பள்ளிகளில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளை வரைமுறைப்படுத்துவதற்கான புதிய வழிமுறைகளை வகுத்து வெளியிட நான் ஆணையிட்டுள்ளேன்.

தனிமனித முன்னேற்றம், அறநெறி சார்ந்து வாழ்தல், சமூக மேம்பாட்டுக்கான சீரிய கருத்துகள்தான் மாணவர்களின் நெஞ்சங்களில் விதைக்கப்பட வேண்டும். கடந்த மூன்றாண்டுகளில், எண்ணற்ற விழாக்களில் கல்வியின் உன்னதத்தையும் - அறிவியல்பூர்வமான சிந்தனைகளை வளர்த்தெடுக்க வேண்டியதன் அவசியத்தையும் தொடர்ந்து வலியுறுத்தியுள்ளேன்.

அறிவியல் வழியே முன்னேற்றத்துக்கான வழி!” என்று பதிவிட்டுள்ளார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com