பேரிடர் மேலாண்மை திருப்புகழ் குழுவின் பரிந்துரைகள் முழுமையாகச் செயல்படுத்தப்படவில்லை!

Chennai flood
சென்னை வெள்ளம்
Published on: 

மழைநீர் வடிகால் பணிகளை போர்க்கால வேகத்தில் முடிக்க வேண்டும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

"தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு இன்னும் ஒரு மாதம் கூட இல்லாத நிலையில், சென்னையில் மழைநீர் வடிகால்களை அமைக்கும் பணிகளும், அமைக்கப்பட்ட வடிகால்களைத் தூர்வாரும் பணிகளும் இன்னும் முடிக்கப்படவில்லை.

சென்னை மாநகரில் எப்போதெல்லாம் இயல்பான அளவுக்கும் கூடுதலாக மழை பெய்கிறதோ, அப்போதெல்லாம் மாநகரின் பெரும்பாலான பகுதிகளில் மழை நீர் தேங்கி வெள்ளம் ஏற்படுவது வாடிக்கையாகி வருகிறது.

சென்னையில் வெள்ள நீர் தேங்குவதைத் தடுக்க. திருப்புகழ் குழு பரிந்துரைப்படி சென்னை மாநகரம் முழுவதும் 1,093 கி.மீ நீளத்திற்கு வெள்ளநீர் வடிகால்கள் அமைக்கும் பணிகள் 2022ஆம் ஆண்டில் தொடங்கப் பட்டன.

ஆனால், நான்காண்டுகள் கழிந்துவிட்ட நிலையில் இதுவரை 1.045 கி.மீ தொலைவுக்கு பணிகள் நிறைவடைந்துள்ளன. மொத்தப்பணிகளில் இன்னும் 5% பணிகள் மட்டும் தான் பாக்கியுள்ளன என்றாலும் அப்பணிகள் மிகவும் முக்கியமானவை.

ஒட்டுமொத்தமாக இன்னும் 48 கி.மீ தொலைவுக்கு தான் மழைநீர் வடிகால் அமைக்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும், ஏற்கனவே அமைக்கப்பட்ட பகுதிகளில் மொத்தம் 105 இடங்களில் ஒரு கால்வாய்க்கும், இன்னொரு கால்வாய்க்கும் இணைப்பை ஏற்படுத்தும் பணி முடிக்கப்படாமல் இருக்கிறது.

அவற்றில் 37 இடங்களில் இணைப்புப் பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், 68 இடங்களில் இணைப்புப் பணிகள் இன்னும் மேற்கொள்ளப்படவில்லை.

இன்னும் 41% வடிகுழிகளில் தூர் அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. அதனால், அந்த இடங்களில், அந்த வடிகுழிகளின் வாயிலாக மழை நீர் வடிகால்களில் இறங்காமல் தேங்கக் கூடும்.

எல்நினோ தாக்கம் நிலவிய 1997 ஆம் ஆண்டில் 52%, 2005 ஆம் ஆண்டில் 79% இயல்பை விட அதிகமாக மழை பெய்துள்ளது.

2015 ஆம் ஆண்டில் இயல்பை விட 347% கூடுதலான மழை பெய்திருக்கிறது. அந்த ஆண்டில் இயல்பாக 408.4 மி.மீ மழை பெய்ய வேண்டும். ஆனால், நவம்பர் 1ஆம் நாள் முதல் திசம்பர் 5ஆம் நாள் வரையிலான 35 நாள்களில், மட்டும் 1,416.8மி.மீ மழை பெய்திருக்கிறது.

அண்மைக்கால எல்நினோ ஆண்டான 2023ஆம் ஆண்டிலும் கடுமையான மழை பெய்து சென்னையில் பெருவெள்ளம் ஏற்பட்டது. அந்த ஆண்டில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் காரணமாக திசம்பர் 1 முதல் 4ஆம் தேதி வரையிலான 4 நாள்களில் மட்டும் சென்னையில் 45.82 செ.மீ மழை பெய்து பெரு வெள்ளம் ஏற்பட்டது.

இவற்றின் அடிப்படையில் நடப்பாண்டும் சென்னையில் இயல்பை விட அதிகமான மழை பெய்தால், அதனால் ஏற்படும் பேரழிவை சென்னை மாநகர மக்களால் தாங்கிக் கொள்ள முடியாது.

சென்னை மாநகரம் கடந்த காலங்களில் 2 அல்லது 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை பெருமழை ஏற்படுத்தும் வெள்ளத்தால் பேரழிவை சந்தித்து வருகிறது.

அதைத் தடுக்க வேண்டும் என்பதற்காகத் தான் பேரிடர் மேலாண்மை வல்லுனர் திருப்புகழ் தலைமையில் குழு அமைக்கப்பட்டு, அதன் அறிக்கையும் பெறப்பட்டது. ஆனால், அந்த அறிக்கை அரசிடம் தாக்கல் செய்யப்பட்டு 42 மாதங்கள் ஆகியும் இன்று வரை பொதுமக்கள் பார்வைக்காக வெளியிடப்படவில்லை; அதன் பரிந்துரைகளும் முழுமையாக செயல்படுத்தப்படவில்லை.

சென்னையில் நடப்பாண்டில் வெள்ளமும், அதனால் பேரழிவும் ஏற்படுவதைத் தடுக்க புதிதாக மழைநீர் வடிகால்களை அமைக்கும் பணிகள், மழைநீர் வடிகால்களுக்கு இடையே இணைப்புகளை ஏற்படுத்தும் பணிகள், வடிகுழிகளை தூர்வாரும் பணிகள் ஆகியவற்றை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும்.

சாலைகளில் ஆங்காங்கே தோண்டப்பட்டுள்ள பள்ளங்களையும் உடனடியாக மூடி சீரமைக்க வேண்டும்." என்று அன்புமணி கூறியுள்ளார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram

எடப்பாடி பழனிசாமிசென்னைபாலியல் வழக்கு

logo
Andhimazhai
www.andhimazhai.com