
திண்டுக்கலில் நடைபெற்ற அரசு விழாவில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நிகழ்ச்சியில் உரையாற்றினார். அப்போது பாஜக வைத்த விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்தார்.
மு.க. ஸ்டாலின் பேசியதாவது: “மத்தியில் 11 ஆண்டுகளாக நடைபெறும் பாஜக ஆட்சியில், தமிழகத்திற்கு ஒரு துரும்பு கூட கிள்ளிப் போடவில்லை. மறுபடியும் நாங்கள்தான் ஆட்சி அமைப்போம். இன்னும் நிறைய திட்டங்களை தீட்டுவோம். தமிழ்நாட்டை நாம் ஆள வேண்டுமா? டெல்லியில் உள்ளவர்களா? உண்மையான பக்தர்கள் ஆட்சியை பாராடடுகிறார்கள். ஆன்மிக பெரியவர்கள் விரும்பும் ஆட்சியை நாங்கள் நடத்தி வருகிறோம்.
இந்துக்களின் உரிமைகள் பறிக்கப்படுவதாக துளியும் உண்மை இல்லாத தகவல்களை அமித் ஷா பரப்பி வருகிறார். மோடி ஆட்சி அமைய வேண்டுமா, வேண்டாமா என மக்களிடம் அமித் ஷா கேள்வி எழுப்பினார். பாஜக கூட்டணிக்கு வாக்களித்தால் பாஜகதான் ஆட்சி அமைக்கும் என அமித் ஷா ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளார். தமிழ்நாட்டிற்கு எதிரான பாஜகவின் ஆட்சி அமைய எடப்பாடி பழனிசாமி பாடுபடுகிறார். கடந்த 5 ஆண்டுகளாக தலை நிமிர ஆரம்பித்துள்ளோம்.
வடமாநிலங்களைப் போல வெறுப்பு பிரசாரம் செய்யலாம் என நினைக்கிறார்கள். அமித் ஷாவா? அவதூறு ஷாவா? திமுக ஆட்சியில் 4 ஆயிரம் கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது.தமிழ்நாட்டுக்கு எதிரான ஓரவஞ்சனையை மாற்றாதபோது, மக்கள் எப்படி உங்களுக்கு வாக்களிப்பார்கள். தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது என்று அமித்ஷாவிற்கு தெரியவில்லை. மக்கள் நலத்திட்டங்களை குறை சொல்ல முடியாதவர்கள் இல்லாத பிரச்சினையை கிளப்புகிறார்கள்” இவ்வாறு அவர் பேசினார்.