அரசு ஊழியர்களுக்கு அட்டகாசமான தீபாவளி... போனஸ் அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின்!

Tamilnadu government secretariat
தலைமைச் செயலகம்
Published on

தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் சி மற்றும் டி பிரிவு தொழிலாளர்களுக்கு 20 சதவீதம் வரை போனஸ் வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

குறைந்தபட்சம் 8,400 முதல் அதிகபட்சம் ரூ.16,400- வரை தீபாவளி போனஸ் வழங்கப்படும். மின் பகிர்மான கழகம், அரசு போக்குவரத்து கழகம், நுகர்வோர் வாணிப பொருள் கழகம் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களின் குரூப் டி, சி பிரிவு ஊழியர்களுக்கு இந்த தொகை அளிக்கப்படும்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

* லாபம் ஈட்டியுள்ள பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் 'C' மற்றும்‘D' பிரிவு தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு அந்தந்த நிறுவனங்களின் ஒதுக்கப்படக்கூடிய உபரி தொகையை கணக்கில் கொண்டு 8.33 விழுக்காடு மிகை ஊதியம் மற்றும் 11.67 விழுக்காடு கருணைத் தொகை என மொத்தம்20 விழுக்காடு வரை மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும்.

* தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்கள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் ஆகிய பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தில் பணிபுரியும் தகுதியுடைய ‘C’ மற்றும் 'D' பிரிவு தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 8.33 விழுக்காடு மிகை ஊதியம் மற்றும் 11.67 விழுக்காடு கருணைத் தொகை என மொத்தம் 20 விழுக்காடு மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும்.

* ஒதுக்கக்கூடிய உபரி தொகை இல்லாத பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் “C” மற்றும் 'D' பிரிவு தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 8.33 விழுக்காடு குறைந்தபட்ச மிகை ஊதியம் மற்றும் 1.67 விழுக்காடு கருணைத் தொகை என மொத்தம் 10 விழுக்காடு மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும்.

* தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் மற்றும் சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம் ஆகியவற்றில் பணிபுரியும் தகுதியுடைய 'C' மற்றும் 'D' பிரிவு பணியாளர்களுக்கு 8.33 விழுக்காடு மிகை ஊதியம் மற்றும் 1.67 விழுக்காடு கருணைத் தொகை வழங்கப்படும்.

* தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் பணிபுரியும் தகுதியுடைய 'C’ மற்றும் 'D' பிரிவு பணியாளர்களுக்கு 8.33 விழுக்காடு மிகை ஊதியம் வழங்கப்படும்.

* தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் தற்காலிக அடிப்படையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ரூ3,000/- கருணைத் தொகையாக வழங்கப்படும்.இதனால், மிகை ஊதியம் பெறத் தகுதியுள்ள நிரந்தரத் தொழிலாளர்கள் குறைந்தபட்சம் ரூ.8400/- மற்றும் அதிகபட்சம் ரூ.16800/- வரை பெறுவர்.

மொத்தத்தில், தமிழ்நாடு அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் 2,69,439 தொழிலாளர்களுக்கு மொத்தம் ரூ.376.01 கோடி மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகையாக வழங்கப்படும். இது தவிர, பல்வேறு கூட்டுறவு அமைப்புகள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கான ஆணைகள் தனியே வெளியிடப்படும். அரசின் இந்த நடவடிக்கை, பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் மேலும் ஊக்கத்துடன் செயல்படவும், எதிர்வரும் விழாக்காலங்களை மகிழ்ச்சியுடன் கொண்டாடவும் வழிவகை செய்யும்” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com