சென்னை இதழியல் கல்வி நிறுவனத்தை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்!

சென்னை இதழியல் நிறுவனத்தை திறந்து வைக்கும் முதல்வர் ஸ்டாலின்
சென்னை இதழியல் நிறுவனத்தை திறந்து வைக்கும் முதல்வர் ஸ்டாலின்
Published on

சென்னை இதழியல் கல்வி நிறுவனத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறையின் 2025-26ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில், இதழியல் துறையில் பயிற்சி, ஆராய்ச்சி மற்றும் ஊடகக் கல்வி மேம்பாட்டுக்கு ஒரு முதன்மையான கல்வி நிறுவனத்தை நிறுவி, அதன் மூலம் ஆர்வம் மிகுந்த இளம் திறமையாளர்களை ஊக்குவிக்கவும், இதழியல் மற்றும் ஊடக ஆய்வியலில் தரமான கல்வியை வழங்கிடும் வகையில், இதழியல் மற்றும் ஊடகவியல் கல்வி நிறுவனம் (Institute of Journalism and Media Studies) இக்கல்வியாண்டு முதல் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி, இதழியல் துறையில் ஆர்வமுள்ள இளைய தலைமுறையினரை ஊக்குவிக்கும் நோக்குடனும், தற்போது வளர்ந்து வரும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப, ஊடகக் கல்வியை வழங்குவதற்காகவும், தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைய தலைமுறையினருக்கு குறைந்த கட்டணத்தில், ஓர் ஆண்டு இதழியல் முதுநிலை பட்டயப் படிப்பை (Post Graduate Diploma in Journalism) வழங்குவதற்காகவும் சென்னை, கோட்டூர்புரத்தில் அண்ணா நூற்றண்டு நூலகம் அருகில் தமிழக அரசு சார்பில் “சென்னை இதழியல் கல்வி நிறுவனம்” அமைக்கப்பட்டுள்ளது.

சென்னை இதழியல் கல்வி நிறுவனத்திற்காக 7.75 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிறுவனத்தில் இதழியல் முதுநிலை பட்டயப் படிப்பு (Post Graduate Diploma in Journalism) இந்த கல்வியாண்டு முதல் (2025 - 2026) தொடங்கப்படுகிறது. இங்கு தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழியிலும் பயிற்றுவிக்கப்படுகிறது.

இந்நிறுவனத்தில் அச்சு, தொலைக்காட்சி, வானொலி மற்றும் இணைய ஊடகங்களில் பணிபுரிவதற்கான திறமையை வளர்த்துக் கொள்ளும் வகையில் பாடத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. சர்வதேச கல்வி நிறுவனங்களுடன் இந்நிறுவனம் ஒப்பந்தம் செய்து கொள்ள உள்ளது. இந்த அனுபவம், நொடிக்கு நொடி மாறிவரும் தொழில்நுட்ப யுகத்தில் அடுத்த தலைமுறையினர் தங்களைத் தயார் செய்துகொள்ள உதவும்.

இதழியல் கல்வியை சிறப்பாக வழங்கவுள்ள, சென்னை இதழியல் கல்வி நிறுவனத்தை கோட்டூர்புரத்தில் தமிழக முதல்வர் இன்றைய தினம் தொடங்கி வைத்து, பார்வையிட்டார். தொடர்ந்து, இக்கல்வி நிறுவனத்தில் இதழியல் முதுநிலை பட்டயப் படிப்பில் முதலாம் ஆண்டு சேர்க்கை பெற்ற மாணவ, மாணவியர்களிடம் முதல்வர் கலந்துரையாடினார்.” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com