சென்னையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆகியோரின் உடல்நலம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்தார்.
சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் உடல்நலக் குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இன்னும் ஓரிரு நாட்களில் சிகிச்சை முடிந்து வீடு திரும்புவார் என்று மருத்துவமனை நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.
நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ராமதாஸை சந்திக்க அவரது மகள் அன்புமணி இன்று (அக்டோபர் 6 ) மருத்துவமனைக்கு வருகை புரிந்தார். இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு காணப்பட்ட சூழலில், அவர் ராமதாஸை பார்க்க வந்தது, பாமக தொண்டர்களுக்கு சற்று ஆறுதலை தந்தது.
மருத்துவமனை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அன்புமணி, ‘அய்யாவை நான் பார்க்கவில்லை. அவர் ஐசியூவில் இருப்பதால், அவரை சந்திப்பதற்கான சூழல் இல்லை. உடல்நிலை சீராக உள்ளது என மருத்துவர்கள் கூறினர். ஓய்வு எடுத்தால் சரியாகி விடுவார்’ என்று தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மருத்துவமனைக்கு வந்து ராமதாஸை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அவரது உடல்நலம் குறித்து கேட்டறிந்து உள்ளார். மேலும் அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் உடல்நலம் குறித்து மருத்துவரிடம் கேட்டுத் தெரிந்து கொண்டார். அவரின் குடும்பத்தாரிடமும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்தார்.