
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 118 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலையணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்த பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்கத்தேவரின் ஜெயந்தி, குருபூஜை விழா ஒவ்வொரு ஆண்டும் விமரிசையாக கொண்டாடப்படும். இந்த ஆண்டுக்கான விழா நேற்று முன்தினம் யாகசாலை பூஜைகளுடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து நேற்று அரசியல் விழாவாக நடந்தது.
இன்று தேவர் ஜெயந்தி விழா, குருபூஜை அரசு விழாவாக நடைபெறுகிறது. இதில் துணை குடியரசுத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள், சமுதாய தலைவர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் தேவர் நினைவிடத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகின்றனர்.
இதற்காக அப்பகுதி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், முத்துராமலிங்கத் தேவரின், 118ஆவது ஜெயந்தி மற்றும் 63ஆம் ஆண்டு குருபூஜையையொட்டி மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து, பசும்பொன்னில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அவருடன் கனிமொழி எம்.பி., அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்