
தஞ்சையில் திமுக முன்னாள் எம்.பி. எல்.கணேசனின் உடலுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார்.
மேலும் அமைச்சர்கள் கே.என். நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி உள்ளிட்டோரும் திமுக மூத்த நிர்வாகி எல்.கணேசனின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
இதுகுறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில், மொழிப்போர்த் தளபதி அண்ணன் 'எல்.ஜி.'க்கு இறுதி மரியாதை செலுத்தினேன். தமிழுணர்வு உள்ளவரை அவர் நினைவுகூரப்படுவார்! இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டைச் சேர்ந்த திமுக மூத்த தலைவரும் முன்னாள் எம்.பி.யுமான எல். கணேசன் (92) வயது மூப்பு காரணமாக இன்று அதிகாலை (ஜன. 4) காலமானார்.
இவர் சட்டப்பேரவை, மேலவை, மக்களவை, மாநிலங்களவை என 4 விதமான பொறுப்புகளிலும் பதவி வகித்தவர்.
1980இல் மாநிலங்களவை எம்.பி.யாகவும், 2004இல் திருச்சி மக்களவை உறுப்பினராகவும், ஒரத்தநாடு தொகுதியில் 2 முறை எம்.எல்.ஏ.வாகவும் பதவி வகித்தார்.
முன்னாள் முதல்வர்கள் அண்ணா, கருணாநிதியுடன் நெருங்கிய நட்புறவில் இருந்த எல். கணேசனை எல்.ஜி. என்றும் அழைப்பர். 1965இல் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் முதன்மை வகித்தவர்.
நாட்டின் அவசரநிலையின்போது, மிசா சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு, சிறை சென்றார்.