பெரியாரின் படத்தை ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் திறந்து வைத்ததை வாழ்நாள் பெருமையாக கருதுகிறேன் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டுக்கு புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஜெர்மனி சென்ற முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அங்கு சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு இங்கிலாந்து நாட்டுக்கு சென்றுள்ளார்.
இந்த நிலையில் இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பெரியாரின் உருவப்படத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். தொடர்ந்து நடந்த நிகழ்வில், அவர் பேசியதாவது:
“நான் இங்கு தமிழ்நாட்டின் முதலமைச்சர், தெற்கு ஆசிய அரசியலை புரட்டி போட்ட இயக்கமான திமுகவின் தலைவர் என்ற தகுதியோடு மட்டுமல்ல; பெரியாரின் பேரன் என்ற கம்பீரத்தோடு உங்கள் முன் நின்று கொண்டிருக்கிறேன். பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் படத்தை ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் திறந்து வைத்ததை என்னுடைய வாழ்நாள் பெருமையாக கருதுகிறேன்.
பகுத்தறிவு பட்டொளி உலகம் முழுவதும் பரவி வருவது என்பதன் அடையாளம்தான் இந்த படம் திறப்பு நிகழ்ச்சி. பெரியார் இன்று உலகம் முழுவதும் தேவைப்படுகிறார் என்பதன் அடையாளமாக அவருடைய படத்தை திறக்க திட்டமிட்டிருக்கிறீர்கள். பெரியார் உருவாக்கிய சுயமரியாதை இயக்கத்தை உலகமயமாக்கும் நோக்கத்தோடு இந்த கருத்தரங்கை ஏற்பாடு செய்துள்ள பேராசிரியர்களுக்கு எனது நன்றி. சுயமரியாதை இயக்கத்தின் தொடர்ச்சியாக இருக்கும் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் பொறுப்பில் இருக்கும் எனக்கு, இதைவிட பெருமை எதுவும் இருக்க முடியாது.
பெரியாரின் சிந்தனைகள் எல்லைகளுக்கு அப்பாற்பட்டது; உலக மக்கள் அனைவருக்கும் பொதுவானது. சுயமரியாதை, பகுத்தறிவு, சமதர்மம், சமத்துவம், பெண் முன்னேற்றம் மூலம் பெரியாரை அறிமுகப்படுத்த வேண்டும். பழமைவாதம், மூடநம்பிக்கை நிறைந்த மண்ணில் முற்போக்கான கருத்துகளை பேசி எழுச்சி பெற வைத்தவர் பெரியார். உலகம் எப்படி இருக்கிறது என அறிவுபூர்வமாக உணர்ந்து எடுத்துச் சொன்னார்; அதனால் தமிழ்நாடு தலைநிமிர்ந்தது.
எத்தனை யுகங்கள் கடந்தாலும் பெரியார் நினைவு கூறப்படுவார், போற்றப்படுவார். பகுத்தறிவும், அறிவியலும் ஒரே நேர்கோட்டில் இருக்கும் என்ற கருத்தால்தான் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் பெரியார் பற்றி பேசுகிறது. ஏற்றத்தாழ்வுகள், தீண்டாமை, சாதிக்கு எதிராக போராட்டங்களை முன்னெடுத்தவர் பெரியார்.
பெரியாரின் இந்த சாதனைகள் எல்லாம் ஆயுதம் காணாத, ரத்தம் சிந்தாத புரட்சிகள். உலகத்தில் எந்த சீர்திருத்த இயக்கத்திற்கும் இல்லாத பெருமையும் புகழும் பெரியாரின் இயக்கத்திற்கு உள்ளது. சமூக நீதிக் கொள்கையை இந்தியா முழுமைக்கான கொள்கையாக அரசமைப்பு சட்டத்தில் இடம்பெறச் செய்தவர் பெரியார். அனைவருக்கும் கல்வி, வேலை என பெரியார் சொன்னதை செய்து காட்டியது திராவிட மாடல் ஆட்சி.
வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என சொல்லப்பட்ட பெண்கள் இன்று விண்வெளிக்கு சென்று வருகிறார்கள். கோவிலுக்குள் கால் வைக்க கூடாது என தடுக்கப்பட்டோரது கரங்கள் கோவில் கருவறைக்குள் காணப்படுகிறது. கல்வி, பொருளாதாரம், உள்கட்டமைப்பு ஆகியவற்றில் தமிழ்நாடு முன்னேறி இருக்கிறது.
ஒரு இனத்திற்கே சுயமரியாதை ஊட்டிய பெரியாரை இன்று உலகம் கொண்டாடி வருவது தமிழ்நாட்டிற்கு பெருமை. பெரியாருக்கு மிக மிக பிடித்த சொல் சுயமரியாதை; அகராதியில் இதை விட சிறந்த சொல் இல்லை என கூறியவர். உலகத்திலேயே உயிரைக் கொடுத்து பெற வேண்டிய ஒன்று சுயமரியாதை என்று அழுத்தம் திருத்தமாக கூறியவர் பெரியார். இவ்வாறு அவர் கூறினார்.
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்துள்ள பெரியாரின் படம், கலை இயக்குநர் தோட்டா தரணி வரைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.