கலைஞர் நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை!
சென்னை மெரினா கடற்கரையில் உள்ள மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
முன்னாள் முதலமைச்சரும், திமுக முன்னாள் தலைவருமான கலைஞர் கருணாநிதி கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்டு 7ஆம் தேதி காலமானார். அவரது 6ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
இதையொட்டி, சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள கலைஞர் கருணாநிதியின் உருவப்படத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற அமைதி பேரணியில் அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள், திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பேரணியில் திமுக மகளிர் அணியினர் கருப்பு புடவையில் கலந்து கொண்டது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.
ஓமந்தூரார் வளாகத்தில் அமைந்துள்ள கலைஞர் கருணாநிதி சிலை அருகிலிருந்து புறப்பட்ட இப்பேரணி, காமராஜா் சாலையில் முடிவடைந்தது. சுமார் 3 கிலோ மீட்டர் நடந்து சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மெரினா கடற்கரையில் உள்ள கலைஞர் கருணாநிதி நினைவிடத்தில் மலா்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
முன்னதாக, திருச்சி மாவட்டம் திருவெறும்பூா் தொகுதிக்கு உள்பட்ட காட்டூரில் கலைஞர் கருணாநிதிக்கு சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்தச் சிலையை அவரது நினைவு தினத்தையொட்டி சென்னையில் இருந்து காணொலி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.