முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

மயிலாடுதுறைக்கு முதல்வர் ஸ்டாலின் ரயில் பயணம்!

மயிலாடுதுறையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக திறப்பு விழாவில் பங்கேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து ரயில் மூலம் புறப்பட்டு சென்றார்.

மயிலாடுதுறை மாவட்டம், மன்னம்பந்தல் ஊராட்சி மூங்கில் தோட்டம் பால்பண்ணை பகுதியில் ரூ.114.48 கோடி மதிப்பீட்டில் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டப்பட்டுள்ளது. இதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை காலை 10 மணிக்கு திறந்து வைக்க உள்ளார்.

இந்த விழாவில் கலந்துகொள்வதற்காக சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து இன்று மாலை 4.15 மணிக்கு திருச்செந்தூர் விரைவு ரயிலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புறப்பட்டு சென்றார். அப்போது எழும்பூரில் ரயில் நிலையத்தில் திரண்டிருந்த தி.மு.க. தொண்டர்கள் முதலமைச்சரை வழியனுப்பி வைத்தனர். தொடர்ந்து, இன்று இரவு 8.15 மணிக்கு சீர்காழி ரயில் நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து கார் மூலம் திருவெண்காட்டில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று தங்குகிறார். இதனையடுத்து நாளை காலை 10 மணிக்கு கார்மூலம் மயிலாடுதுறை சென்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை திறந்து வைக்கிறார்.

இந்த நிகழ்வை முடித்து விட்டு, மதியம் 1 மணியளவில் திருச்சி – சென்னை சோழன் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறி, மாலை 6.15 மணிக்கும் மீண்டும் சென்னை வந்தடைகிறார். முதலமைச்சரின் இந்த ரயில் பயணம் காரணமாக எழும்பூர் ரயில் நிலையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com