இரசாயன உரங்களுக்கு பதிலாக மீன்களின் கழிவுகளில் இருந்து உயிர் உரங்களை சிபா தயாரித்துள்ளது .
இந்திய வேளாண் ஆராய்ச்சி குழுமம் (ஐசிஏஆர்) கீழ் இயங்கும் சென்னையில் உள்ள மத்திய உவர்நீர் மீன்வளர்ப்பு நிறுவனம், மீன்களின் கழிவுகளில் இருந்து சிபா-பிளாங்க்டன்பிளஸ், சிபா-ஹார்டிபிளஸ் என்ற இரண்டு புதுமையான உயிர் உரங்களை தயாரித்துள்ளது.
மீன் கழிவுகளை அகற்றுவதில் ஏற்படும் சிரமத்தை போக்கவும், சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் மண் வளத்தை அதிகரிக்கவும் இந்த உரங்கள் உதவும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் ஆண்டுதோறும் சுமார் 195 லட்சம் டன் மீன்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதன் மூலமாக 60 லட்சம் டன்களுக்கும் அதிகமான மீன் கழிவுகள் உருவாகின்றன. இதை முறையாக பயன்படுத்தினால், ஆண்டுதோறும் 48 லட்சம் டன் சிபா-பிளாங்க்டன்பிளஸ் (CIBA-PlanktonPlus), 3 லட்சம் டன் சிபா-ஹார்டிபிளஸ் (CIBA-HortiPlus) ஆகிய உயிர் உரங்களை உற்பத்தி செய்யலாம்.
மீன் மற்றும் இறால் குளங்களில் சிபா-பிளாங்க்டன்பிளஸை பயன்படுத்துவதால், ஒரு ஹெக்டேருக்கு 0.6–0.8 டன்கள் வரை உற்பத்தி அதிகரித்துள்ளது. உயிர் பிழைப்பு விகிதம் 10–15 % அதிகரிப்பதுடன், தீவனத் தேவைகள் 20–50 % குறைந்துள்ளது எனப் பண்ணை ஆய்வில் தெரியவந்துள்ளது.
இதனால், கூடுதலாக 49.2 லட்சம் டன் மீன் மற்றும் இறால் உற்பத்தி பெருகி, தேசிய மீன் உற்பத்தியும் விவசாயிகளின் வருமானமும் கணிசமாக அதிகரிக்கும் என்று விஞ்ஞானிகள் மதிப்பிடுகின்றனர்.
நெல், காய்கறிப் பயிர்களில் மேற்கொள்ளப்பட்ட களச் சோதனையில், இரசாயன உரங்களின் பயன்பாட்டை குறைத்துள்ளது. அவரை, கீரை, முட்டைக்கோஸ், காலிஃபிளவர் மற்றும் பீட்ரூட் உட்பட்ட காய்கறிகளில் மகசூல் அதிகரித்துள்ளது.
இரண்டாவது தயாரிப்பான சிபா-ஹார்டிபிளஸால், உருளைக்கிழங்கு விளைச்சல் 23.8 சதவீதம் வரை அதிகரித்ததை காணமுடிகிறது. மேலும், இது ஒரு ஹெக்டேருக்கு 100–150 கிலோ டிஏபி உரத்திற்குப் பதிலாகத் திறம்படப் பயன்படுத்தலாம் என்று விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.
இந்த உரங்களின் உற்பத்தியை மகாராஷ்டிர அரசு, 'முக்கியமந்திரி மத்ஸ்யசம்பதா யோஜனா' திட்டத்தின் கீழ் இணைத்துள்ளது. மேலும், உற்பத்தி அலகுகளை நிறுவுவதற்கும், இத்திட்டத்தை ஏற்றுக்கொள்ள ஊக்குவிப்பதற்கும் பயனாளிகளுக்கு 75% நிதியுதவி வழங்குகிறது.
விவசாயிகள், மீனவர்கள், நுகர்வோர், சுற்றுச்சூழல் உட்பட்ட அனைவருக்கும் ஒரே நேரத்தில் பயனளிக்கும் வகையில் இந்த உரத் தயாரிப்பு அமைந்து உள்ளது.