ஸ்டாலின், உதயநிதியை கவனிக்கவைத்த சினிமா இயக்குநரின் பேச்சு!

ஸ்டாலின், உதயநிதியை கவனிக்கவைத்த சினிமா இயக்குநரின் பேச்சு!
Published on

“துரோணாச்சாரியார், கிருபாச்சாரியார் தொடங்கி இராஜாகோபாலாச்சாரியார்வரை நாம் படிப்பதைத் தடுத்துக்கொண்டே இருந்தனர்” என இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா கூறியுள்ளார்.

நடப்பு 2025-26 கல்வி ஆண்டிற்கான புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன் உட்பட்ட 7 திட்டங்களின் சாதனை விழா சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று மாலையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ என்ற கருப்பொருளில் நடைபெறும் இவ்விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையேற்றுள்ளார்.

சிறப்பு விருந்தினராக தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி பங்கேற்றுள்ளார்.

நிகழ்ச்சியில், நான் முதல்வன், புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன், காலை உணவுத் திட்டம் முதலிய தமிழக அரசின் கல்வித் திட்டங்கள் மூலம் பயனடைந்த மாணவ, மாணவிகள் தங்களின் அனுபவத்தைப் பகிர்ந்தனர்.

இயக்குநர்கள் தமிழரசன் பச்சைமுத்து, இராம்குமார், மிஷ்கின் ஆகியோர் பேசினர்.

இவர்களைத் தொடர்ந்து பேசிய இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா, “வேற்றுமை தெரிந்த நாற்பால் உள்ளும், கீழ்ப்பால் ஒருவன் கற்பின், மேற்பால் ஒருவனும் அவன் கண் படுமே” என்ற புறநானூறு பாடலுடன் பேச்சைத் தொடங்கினார்.

தொடர்ந்து பேசிய அவர், ”நாம் கல்வி கற்கக்கூடாது என பழங்காலத்திலிருந்து இப்போதுவரை தடுத்துக்கொண்டே இருக்கிறார்கள். கற்றுக்கொண்டிருந்த நாம் இடையில் ஏன் கல்வியை இழந்தோம் என யோசிக்க வேண்டும்.

இங்கு கல்விசார்ந்து, இரண்டு விதமான கருத்தியல் உள்ளது. ஒன்று, திராவிடக் கருத்தியல்... எல்லோரும் படிக்க வேண்டும். எல்லோரும் அறிவாளியாக இருக்கவேண்டும் என்பது.

இரண்டாவது, ஆரியக் கருத்தியல். கல்வி கற்க ஆசைப்பட்ட சிறுவன் ஒருவன் ஆசிரியர் ஒருவரிடம் சென்று கேட்டபோது, “நீங்க எந்தாளுங்க” எனக் கேட்டு, “உனக்கு சொல்லித்தர முடியாதுனு” அவனைத் திருப்பி அனுப்பிவிட்டார். பிறகு, அந்தச் சிறுவனே வில்வித்தையைக் கற்றுக்கொண்டு, அதே ஆசிரியரிடம் சென்று சொன்னபோது, அவனது கட்டைவிரலை வாங்கிக் கொண்டார். அந்த ஆசிரியரிடம் கர்ணன் வில்வித்தை கற்றுக்கொள்ள நினைத்தபோது, வாய்ப்பு மறுக்கப்பட்டது.

பின்னர், கிருபாச்சாரியாரிடம் ’தான் ஒரு மேட்டுக்குடி’ என சொல்லி கர்ணன் தொழில் கற்றுக்கொண்டார். உண்மை என்னவென்று தெரியவந்தபோது, “நீ கற்ற தொழில் உன்னைவிட்டுப் போய்விடும்” என கிருபாச்சாரியார் சாபம் விட்டார்.

இப்படி துரோணாச்சாரியார், கிருபாச்சாரியார் தொடங்கி இராஜாகோபாலாச்சாரியார் வரை நாம் படிப்பதைத் தடுத்துக் கொண்டே உள்ளனர்.

சமத்துவம் இருக்கக்கூடாது என சொல்கின்ற இடத்தில் சமத்துவமும் சமூகநீதியும் இருக்கவேண்டும் என சொல்கின்ற ஒரு கட்சி ஆட்சியில் இருக்கும்போது, எல்லோரையும் படிக்க வைப்பதற்கு எத்தனை திட்டங்கள் போட முடியுமோ அத்தனை திட்டங்களையும் போட்டுக் கொண்டு இருக்கின்றனர்.

காலை உணவுத் திட்டம், நான் முதல்வன், தமிழ்ப் புதல்வன் என நிறைய திட்டங்கள் போட்டு, எப்படியாவது படித்துவிட்டு மேலே சென்றுவிடுங்கள் என்கிறார்கள். இதைத் தடுப்பதற்கு, முன்னர் கட்டைவிரலைக் கேட்டமாதிரி இப்போது புதிய கல்விக் கொள்கையைக் கொண்டுவந்து நாம் படிப்பதைத் தடுக்க பார்க்கிறார்கள்.

நமக்கு நியாயமாக வரவேண்டிய ரூ. 2150 கோடியைத் தரமாட்டேன் என்று சொல்கிறார்கள். கொள்கை அளவில் நமக்கு முரணான கட்சி ஒன்றியத்தை ஆளும்போது, எந்த உதவியும் இல்லாமல், கைகால்களைக் கட்டி தண்ணீரில் போட்டபிறகு, நீந்தலாம் என பார்க்காமல், தான் நீந்தி, தமிழக மக்களைக் கரைசேர்க்கக்கூடிய தமிழக முதல்வருக்கு நன்றி.” எனப் பேசி முடித்தார்.

வழக்கமாக, இயல்பாக மற்றவர்களின் பேச்சை கவனிக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தியாகராஜன் குமாரராஜாவின் பேச்சை மிகவும் உன்னிப்பாக கவனித்தார்.

இவரின் பேச்சை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ரசித்துக் கேட்டார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com