பொய் வழக்குகளில் முத்துக்குமார் தொடர்ந்து சிறையில் அடைப்பு!

சிஐடியு முத்துக்குமார்
சிஐடியு முத்துக்குமார்
Published on

”எஸ்.எச். எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் இரண்டு ஆண்டுகளாக தொழிலாளர் உரிமைகளை பறித்து அவர்களை வேலை நீக்கம் செய்திருக்கிறது. இந்த நடவடிக்கையைக் கைவிட வேண்டுமென வலியுறுத்தி மார்ச் 27ஆம் தேதி, சிஐடியு மாநில துணைப் பொதுச் செயலாளரும் சிபிஐ (எம்) மாநிலக்குழு உறுப்பினருமான இ. முத்துக்குமார் தலைமையில் குடும்பத்தோடு போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களை காவல்துறை கைது செய்தது. இ. முத்துக்குமார், ஐந்து தோழர்களை வேலூர் மத்திய சிறையில் நள்ளிரவில் அடைத்தது. மேலும், இ.முத்துக்குமாரை மட்டும் இதர தோழர்களிடமிருந்து பிரித்து வேறொரு இடத்தில் அடைத்துள்ளனர்.” என்று மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் கண்டனம் தெரிவித்துள்ளார். 

”தேர்தல் நடைமுறை காரணமாக மாநிலத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இல்லாத நிலையில், சிறையில் இருக்கும் இ.முத்துக்குமார் பிணையில் வெளியில் வந்து விடக்கூடாது என்பதற்காகவே பன்னாட்டு நிறுவனங்களின் தூண்டுதலின் பேரில் பழைய வழக்குகள் இருப்பதாகச் சொல்லி அவரை மீண்டும், மீண்டும் காவல்துறை கைது செய்து வருகிறது. அரசியல் சாசனம் வழங்கியுள்ள சட்ட மற்றும் மனித உரிமைகளை பாதுகாக்க வேண்டிய காவல்துறை காஞ்சிபுரம் மாவட்டத்தில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சேவகம் செய்யக் கூடியதாக மாறி இருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது.

நவீன தாராளமய கால கட்டத்தில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் காவல்துறை உயர் அதிகாரியாக பொறுப்பு ஏற்பவர்கள் பன்னாட்டு மற்றும் இந்திய பெரும் நிறுவனங்கள் விரும்புவதையும், சொல்வதையும் செய்யக் கூடியவர்களாக இருப்பது காவல்துறை மீது நம்பிக்கையை இழக்கச் செய்கிறது. கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக பழிவாங்கும் உணர்ச்சியோடு காவல்துறை நடப்பது சட்டவிரோத செயல் மட்டுமல்ல, மனித உரிமை மீறலாகும். சாதாரண குற்றப்பிரிவுகளில் போடப்பட்டுள்ள வழக்குகளில் கூட, நீதித்துறை நடுவர் பிணையை மறுத்து வருவது சரியல்ல என்பதை சுட்டிக்காட்டுகிறோம்.

எனவே, வேலூர் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இ.முத்துக்குமார் மற்றும் சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர் கார்த்திக், எஸ்.ஹெச் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் பழிவாங்கும் நடவடிக்கையால் வேலை நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களான கணேஷ்குமார், நீதிவேல், மதனகோபால், மோகன் ஆகியோரை நிபந்தனையின்றி விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களின் நிர்பந்தத்தின் காரணமாக தோழர் இ.முத்துக்குமார் அவர்களை அடுத்தடுத்து கைது செய்வதை நிறுத்த வேண்டும்.” என்று பெ. சண்முகம் கூறியுள்ளார். 

logo
Andhimazhai
www.andhimazhai.com