
நீட்தேர்வு முறைகேடுகளுக்காக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவிவிலக வேண்டுமெனக் கோரி தலைநகர் தில்லியில் மாணவர், இளைஞர்கள் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.
கரப்பான்பூச்சி மக்கள் கட்சியினர் முன்னின்று நடத்திவரும் இப்போராட்டத்தில், காவல்துறையினர் தாக்குதல் நடத்தியதில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர்.
இந்த நிலையில், மாணவர்களின் போராட்டத்துக்கு ஆதரவாக தமிழகத்தில் இந்திய மாணவர் சங்கத்தினர் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களைத் தொடர்ந்து கரப்பான்பூச்சி கட்சியின் தமிழ்நாடு பிரிவினர் இன்று சென்னை, தியாகராயர் நகரில் போராட்டத்தில் இறங்கினர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில அலுவலகமான பாலன் இல்லத்தில் அவர்கள் தொடர் முழக்கப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவர்களின் போராட்டத்திற்கு பல்வேறு அமைப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் மாநிலத் தலைவர் க.இப்ராஹிம், மாநிலச் செயலாளர தினேஷ், தென்சென்னை மாவட்டச் செயலாளர் மணிகண்டன், விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் சார்பாக பிரதாப் சந்திரன் ஆகியோர் பேசினர்.