அரசுப் பள்ளி ஆசிரியர் செய்த செயல் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை நெகிழச்செய்துள்ளது.
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையைச் சேர்ந்த ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிபவர் செல்வசிதம்பரம். இவர் நேற்று (ஜூன் 10) தம் பள்ளியில் வழங்கப்படும் காலை உணவை சாப்பிட்டுப்பார்த்து அதன் தரத்தைப் பாராட்டி சமூக ஊடகத்தில் பகிர்ந்திருந்தார்.
’’முதலமைச்சர் காலை உணவுத்திட்டம்… இன்று எம்பள்ளி மாணவர்களுக்கு ரவா கிச்சடி, சாம்பார் மாதிரி உணவை உண்டு கருத்துக்களை பதிவேட்டில் பதிவு செய்தேன். சிறப்பாக இருந்தது’’ – இவ்வாறு அவர் எழுதி இருந்தார்.
இதைக் கண்ட முதலமைச்சர் முக ஸ்டாலின் அந்த செய்தியை பகிர்ந்ததுடன் தன் மகிழ்ச்சியையும் தெரிவித்தார்.
”எந்த மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டாலும், மாவட்ட ஆட்சியர் போன்ற உயரதிகாரிகளைப் பார்த்தாலும், "உங்கள் பகுதியில் #CMBreakfastScheme உணவின் தரத்தைப் பள்ளிகளுக்குச் சென்று ஆய்வு செய்தீர்களா?" என்று நான் கேட்பது வழக்கம்!
அந்த வகையில், ஆசிரியர் ஒருவரே அதைச் செய்திருப்பது கண்டு மகிழ்கிறேன். காலை உணவுத் திட்டம் என்பது வெறுமனே மாணவர்களின் பசியைப் போக்கும் திட்டமோ, ஊட்டச்சத்தை அளிக்கும் திட்டமோ மட்டுமல்ல; நாளைய தமிழ்நாட்டுக்கான வலுவான அடித்தளம் அது!’’
இதைத் தொடர்ந்து இந்த செய்தி வைரலாகப் பரவிய நிலையில் ஆசிரியர் செல்வ சிதம்பரம், ”பள்ளிக்குழந்தைகளின் தேவை அறிந்து இந்தியாவிற்கே முன்னோடி திட்டமாக நீங்கள் கொண்டு வந்த காலை உணவுத் திட்டம் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது..அதனை நூறு சதவீதம் வெற்றி பெற வைப்பது களத்தில் செயல்படும் ஆசிரியர்களின் கடமை.... உங்களின் பாராட்டுகள் எங்கள் ஆசிரியர் சமுதாயத்திற்கு இன்னும் ஊக்கம் அளிக்கும்...நெஞ்சம் நிறைந்த நன்றிகள் ஐயா” என்று பதிலளித்துள்ளார்.