மீனவர்கள் இன்று போராட்டம்- முதலமைச்சர் தில்லிக்குக் கடிதம்!

CM letter on tamilnadu fishermen issue
தமிழக மீனவர்கள் தொடர்பாக முதலமைச்சர் கடிதம்
Published on

தூத்துக்குடி மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் முதலமைச்சர் மைய அரசுக்குக் கடிதம் அனுப்பியுள்ளார்.

தூத்துக்குடி, தருவைகுளம் பகுதி மீனவர்கள் 22 பேர் கடந்த மாதம் 5ஆம் தேதி இலங்கைக் கடற்படையிடம் பிடிபட்டனர். அவர்களில் 12 பேருக்கு கடந்த 3ஆம் தேதி அபராதமும் ஆறு மாதம் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது. மற்றவர்களுக்கு நாளை தண்டனை விவரம் அறிவிக்கப்படும் எனும் நிலையில், இதைக் கண்டித்து தருவைகுளத்தில் மீனவர்கள், அவர்களின் குடும்பத்தினர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். 

எதிர்க்கட்சியான அ.தி.மு.க. இப்போராட்டத்தை ஆதரித்து பங்கேற்றுள்ள நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். 

அதில், இலங்கை அதிகாரிகளால் இந்திய மீனவர்கள் கைது செய்யப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருவதைக் குறிப்பிட்டு, கடந்த 7-09-2024 அன்று புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 14 மீனவர்களும், IND-TN-08-MM-198, IND-TN-08-MM-28 மற்றும் IND-TN-08-MM-52 பதிவெண்கள் கொண்ட அவர்களது மூன்று மீன்பிடி விசைப்படகுகளும் இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்துள்ளதை முதலமைச்சர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஆண்டில் மட்டும் (7-09-2024 வரை) 350 மீனவர்கள் மற்றும் 49 மீன்பிடிப் படகுகள் இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளன என்றும், கடந்த ஆறு ஆண்டுகளில் இதுவே மிக அதிகமானது என்றும் அவர் தன் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இலங்கை நீதிமன்றங்கள் மீனவர்களின் சக்திக்கு மீறிய அபராதங்களை விதித்து வருவதாகவும் இலங்கை அதிகாரிகளின் இத்தகைய நடவடிக்கைகள், தமிழக மீனவர்கள் அங்கு சிறையில் இருக்கும் காலத்தை நீட்டிக்க வழிசெய்வதோடு, ஏற்கெனவே துயரத்தில் உள்ள மீனவக் குடும்பங்களை மிகுந்த வேதனைக்குள்ளாக்கி அவர்களுக்கு மிகப்பெரிய பொருளாதார இழப்பிற்கும் வழி வகுக்கும் என்று தனது முந்தைய கடிதத்திலேயே சுட்டிக்காட்டியுள்ளதையும் ஸ்டாலின் நினைவுகூர்ந்துள்ளார்.

எனவே, இலங்கை சிறையில் உள்ள அனைத்து மீனவர்களையும், அவர்களின் மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட உறுதியான தூதரக முயற்சிகளை மேற்கொள்ளுமாறும்,

மீனவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கடுமையான அபராதத் தொகையைத் தள்ளுபடி செய்யவும், கூட்டுப்பணிக் குழுக் கூட்டத்தைக் விரைந்து நடத்தவும் வெளியுறவுத் துறை அமைச்சர் தலையிட்டு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தன் கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com