தமிழக மீனவர்களை விடுவிக்க மாநில அரசு கடிதம்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
Published on

இலங்கை காவலில் இருந்து விடுவிக்கப்பட்ட அனைத்து மீனவர்களும் தாயகம் திரும்புவதற்கும், இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள அனைத்து இந்திய மீனவர்களை விடுவிப்பதற்கும் உடனடி தூதரக நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தி வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பியுள்ளார்.

அக்கடிதத்தில், 18.02.2026 அன்று ராமேஸ்வரம் மீன்பிடி இறங்குதளத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த 18 மீனவர்கள், அவர்களின் மூன்று மீன்பிடிப் படகுகளுடன் கைது செய்யப்பட்டதையும், அதே நாளில் நடந்த மற்றொரு சம்பவத்தில், இராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற நான்கு மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டதையும் முதலமைச்சர் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

மீனவ சமூகத்தின் வாழ்க்கையும் வாழ்வாதாரமும் கடலையே நம்பியுள்ளதால் இலங்கை அதிகாரிகளால் மீனவர்கள் அடிக்கடி கைது செய்யப்படுவது அவர்களது குடும்பத்தினரிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது என்று குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், இன்றைய நிலவரப்படி 104 மீனவர்களும் 258 படகுகளும் இலங்கை காவலில் உள்ளதாக தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும், பிப்ரவரி முதல் வாரத்தில் யாழ்ப்பாணம் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட 12 மீனவர்கள் தாயகம் திரும்புவதில் தொடர்ந்து தாமதம் ஏற்படுவது, அவர்களின் குடும்பங்களை நிச்சயமற்ற சூழலிலும் பொருளாதார நெருக்கடியிலும் ஆழ்த்தியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, இலங்கை காவலிலிருந்து விடுவிக்கப்பட்ட அனைத்து மீனவர்களும் தாயகம் திரும்புவதற்கும், தற்போது கைது செய்யப்பட்டு அங்கு காவலில் வைக்கப்பட்டுள்ள அனைத்து இந்திய மீனவர்களை விடுவிப்பதற்கும் உடனடித் தூதரக நடவடிக்கைகளை எடுக்கவும் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டுள்ளார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com