மதுரை ராஜேந்திரனுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் நினைவுப் பரிசு
மதுரை ராஜேந்திரனுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் நினைவுப் பரிசு

அரசுப் பள்ளிக்கு ரூ.1.1 கோடி தந்த தொண்டுள்ளம் - மு.க.ஸ்டாலின் தந்த இன்ப அதிர்ச்சி

மதுரையில் அரசுப் பள்ளிக்கு 10 வகுப்பறைகள் உட்பட 1.1 கோடி ரூபாய் செலவில் பல்வேறு உதவிகளை வழங்கிய சுயதொழில் புரிவோர் ராஜேந்திரன் என்பவரை, முதலமைச்சர் ஸ்டாலின் இன்று நேரில் பாராட்டினார்.

தென் மாவட்டங்களுக்குப் பயணம் செய்துள்ள அவர், மதுரையில் பல்வேறு சமூகப் நலப் பணிகளை ஆற்றி வரும் மதுரை தத்தநேரியைச் சேர்ந்த சுயதொழில் புரிந்து வரும் ராஜேந்திரனை நேரில் அழைத்து பாராட்டினார். அவருக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்தார். அவரின் தொண்டைப் பாராட்டியதுடன், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் சிலையையும் வழங்கினார்.

மதுரை தத்தநேரியைச் சேர்ந்த ராஜேந்திரன், திருப்பதி விலாஸ் என்ற பெயரில் மிளகாய், வத்தல், வடகம் வியாபாரம் செய்துவருகிறார். சமூகப் நலப் பணிகளில் ஆர்வம் கொண்ட அவர், மதுரை மாநகராட்சி, திரு.வி.க. மேல்நிலைப் பள்ளிக்கு 10 வகுப்பறைகள், இறைவணக்க கூட்ட அரங்கம், இருசக்கர வாகனம் நிறுத்துமிடம் ஆகியவற்றை 1 கோடியே 10 இலட்சம் ரூபாய் செலவில் அமைத்துத் தந்துள்ளார்.

மேலும், இந்த ஆண்டு மதுரை மாநகராட்சி, கைலாசபுரம் ஆரம்பப் பள்ளியில் 4 வகுப்பறைகள், ஒரு ஆழ்துளைக் கிணறு, உணவு அருந்தும் இடம், கழிப்பறைகள் ஆகியவற்றை 71 இலட்சத்து 45 ஆயிரம் ரூபாய் செலவில் அமைத்துத் தந்துள்ளார்.

மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயில் அருகில் உள்ள புது மண்டபத்தை பழமை மாறாமல் புதுப்பிக்கும் பணிக்கு 2 கோடி ரூபாய் வழங்குவதாகவும் அவர் உறுதியளித்துள்ளார்.

இவ்வளவு நற்செயல்களைச் செய்யும் ராஜேந்திரனின் அரும்பணி தொடர, அவருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் இன்ப அதிர்ச்சி தரும் வகையில் நேரில் அழைத்து பாராட்டியுள்ளார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com