எல்.ஐ.சி. இணையத்தளத்தில் இந்தித் திணிப்பைக் கண்டித்து பல்வேறு அரசியல் தலைவர்களும் கண்டனம் தெரிவித்ததைத் தொடர்ந்து, முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும் தன் கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார்.
இதுகுறித்து அவர் தன் சமூக ஊடகப் பக்கங்களில் வெளியிட்டுள்ள கருத்து:
“எல்.ஐ.சி. இணையதளம் இந்தித் திணிப்புக்கான கருவியாகச் சுருக்கப்பட்டுள்ளது. ஆங்கில மொழிக்கு மாற்றுவதற்கான தெரிவும்கூட இந்தியில்தான் உள்ளது.
இது இந்தியாவின் மொழிப் பன்மைத்துவத்தை நசுக்கும் வலுக்கட்டாயமான பண்பாட்டு, மொழித் திணிப்பேயன்றி வேறல்ல. இந்தியர்கள் அனைவரின் ஆதரவோடும் வளர்ந்ததுதான் எல்.ஐ.சி! அத்தகைய நிறுவனம் தனது வளர்ச்சிக்குப் பங்களித்த பெரும்பான்மையான மக்களை இப்படி வஞ்சிக்கத் துணியலாமா?
உடனடியாக இந்த மொழிக் கொடுங்கோன்மையை நிறுத்திப் பழையபடி ஆங்கிலத்துக்கு மாற்ற வலியுறுத்துகிறேன்.” என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார்.