சென்னை, கொளத்தூரில் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் 25 கோடி ரூபாயில் கபாலீசுவரர் கலை - அறிவியல் கல்லூரிக்கு புதிய கட்டடம் கட்டப்படுகிறது. தொகுதியின் சட்டப்பேரவையின் உறுப்பினர் முதலமைச்சர் ஸ்டாலின் இதற்கான அடிக்கல் நாட்டி, பணிகளைத் தொடங்கிவைத்தார்.
இந்து சமய அறநிலையத்துறை நிர்வாக கட்டுப்பாட்டிலுள்ள திருக்கோயில்கள் வழிபாட்டுத் தலங்களாக மட்டுமல்லாமல், 25 பள்ளிகளும் 10 கல்லூரிகளும் நடத்தப்பட்டு வருகின்றன. இவற்றில் மொத்தம் 22,249 மாணவர்கள் படித்துவருகின்றனர்.
02.11.2021 அன்று தொடங்கப்பட்ட இந்தக் கல்லூரியில் 240 பேர் சேர்ந்தனர். இங்கு பிகாம், பிபிஏ, பிசிஏ, பிஎஸ்சி கணினி அறிவியல் ஆகிய பட்டப்படிப்புகளும் சைவ சித்தாந்தம் பட்டயப்படிப்பும் பயிற்றுவிக்கப்படுகிறது.
அதைத் தொடர்ந்து, 2022ஆம் ஆண்டில் 480 மாணவர்களும் 2023ஆம் ஆண்டில் 685 மாணவர்களும், 2024ஆம் ஆண்டில் 748 மாணவர்களும் சேர்ந்து படித்துவருகின்றனர்.
இக்கல்லூரியில் 2023-24 ஆம் கல்வியாண்டில் இறுதி ஆண்டு பயின்ற 141 பேர் வளாக நேர்காணல் மூலம் பல்வேறு முன்னணி நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.
தற்போது வாடகை கட்டடத்தில் இயங்கிவரும் அருள்மிகு கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு புதிய கட்டடம் கட்டுவதற்கு, கொளத்தூரில் சோமநாத சுவாமி திருக்கோயிலுக்கு சொந்தமான இடம், இந்து சமய அறநிலையத்துறைக்கு நில மாற்றம் செய்யப்பட்ட இடம் என மொத்தம் 5.96 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இக்கல்லூரிக் கட்டடமானது, முதற்கட்டமாக தரைத்தளத்துடன் நான்கு தளங்களுடன் 20 வகுப்பறைகள், முதல்வர் அறை, ஆசிரியர்கள் அறை, அலுவலகம், ஆய்வகங்கள், கணினி அறை, கருத்தரங்கு கூடங்கள், நூலகம், உணவகம், வாகன நிறுத்துமிட வசதிகளுடனும், இரண்டாம் கட்டத்தில் 24 வகுப்பறைகள், ஆசிரியர்கள் அறை, கருத்தரங்கு கூடம், ஆய்வகங்கள் ஆகியவற்றுடன் கழிப்பிடங்களுடன் கட்டப்படவுள்ளது.
இந்நிகழ்ச்சியில் இந்து சமயத் துறை அமைச்சர் சேகர்பாபு, உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் கோவி. செழியன், மேயர் பிரியா, திருவண்ணாமலை ஆதீனம் பொன்னம்பல தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், மயிலம் பொம்மபுர ஆதீனம் ஸ்ரீ சிவஞான பாலய சுவாமிகள், இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.