முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

3 தமிழக மீனவர்கள் உட்பட 15 பேர் இலங்கைப் படையால் கைது- முதல்வர் கடிதம்!

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திடவும், இந்தியா-இலங்கை நாடுகளுக்கிடையேயான கூட்டு நடவடிக்கைக் குழுவை விரைவில் கூட்டிடவும்  நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பியுள்ளார்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 மீனவர்கள் உட்பட 15 மீனவர்கள், இந்திய எல்லையைத் தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி, இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், அவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்கக் கோரி முதலமைச்சர் கடிதம் எழுதியுள்ளார். 

அதில், இந்திய மீனவர்கள் இலங்கை அதிகாரிகளால் அடிக்கடி கைது செய்யப்படுவது குறித்து தான் ஏற்கெனவே பலமுறை கடிதம் எழுதியுள்ளதாகவும், கடந்த வாரம் எழுதியிருந்த கடிதத்தில் இலங்கையில் சிறைபிடிக்கப்பட்டிருந்த 22 மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்க தான் கோரியிருந்ததையும் சுட்டிக்காட்டியுள்ள அவர்,

இன்று (15.03.2024) தமிழ்நாட்டைச் சேர்ந்த மூன்று மீனவர்கள் உட்பட 15 மீனவர்களும், அவர்களது மீன்பிடிப் படகுகளும் இலங்கைக் கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளதாகக் கவலையோடு குறிப்பிட்டுள்ளார். 

இதுபோன்று மீனவர்களைக் கைது செய்யும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்வதால் மீனவர்களின் வாழ்வாதாரம் சீர்குலைவதுடன், மாநிலத்தில் கடலோரப் பகுதிகளில் வாழும் மீனவ சமூகத்தினரிடையே பெருத்த கொந்தளிப்பும், விரக்தியும் ஏற்பட்டுள்ளது; இப்பிரச்னைக்குத் தூதரக நடவடிக்கையின் மூலம் தீர்வுகாண வேண்டியது மிக அவசியம் என்றும் முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார். 

இந்தியா-இலங்கை நாடுகளுக்கிடையேயான கூட்டு நடவடிக்கைக் குழுவின் கூட்டத்தை உடனடியாகக் கூட்டி, அதன்மூலம் இலங்கையில் சிறைப்பிடிக்கப்பட்டுள்ள மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவிக்க இலங்கை அதிகாரிகளை வலியுறுத்த வேண்டுமென்றும் வெளியுறவுத் துறை அமைச்சரைக் கேட்டுக்கொண்டுள்ளார்

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com