மதுரையில் அண்மையில் பெய்த மழையால் செல்லூர் வட்டாரத்தில் திடீர் வெள்ளம் ஏற்பட்டது. இதற்குத் தீர்வாக சிமெண்ட் கால்வாய் அமைக்க ரூ.11.9 கோடி ஒதுக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், “இராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் கிராமத்தில் தேவர் திருமகனார் ஜெயந்தியை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (30.10.2024) நேரில் சென்று மரியாதை செலுத்தினார். அதன்பின்னர் மதுரை வந்த முதலமைச்சர், வணிகவரித் துறை அமைச்சர் பி.மூர்த்தி, தகவல்நுட்பவியல் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், மதுரை மாவட்ட ஆட்சியர், மதுரை மாநகராட்சி ஆணையர், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களுடன் மதுரையில் வெள்ளபாதிப்பு நிலவரம் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
”இந்த ஆய்வுக் கூட்டத்தின்போது மதுரையில் பெருமழையால் பாதிக்கப்பட்ட செல்லூர் பகுதி மீண்டும் அவ்வாறு நேராதிருக்க உடனடியாக மேற்கொள்ளவேண்டிய பணியாக 290 மீட்டர் நீளத்திற்கு சிமெண்ட் கால்வாய் அமைக்கவேண்டியதன் தேவை குறித்து முதலமைச்சரிடம் தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் முதலமைச்சர் செல்லூர் கால்வாயிலிருந்து நீர் வெளியேறுவதற்கு சிமெண்ட் கால்வாய் 11.9 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைத்திட உத்தரவிட்டார். இதன்மூலம் இப்பகுதி மக்கள் பெரிதும் பயனடைவர்.” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.