CM Stalin Signs Agreements During US Visit
முதலீட்டாளர்கள் மாநாட்டில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், தொழில்துறை அமைச்சர் டிஆர்பி. ராஜா

முதல்வர் முன்னிலையில் ஒப்பந்தம் செய்த 8 நிறுவனங்கள்!

Published on

தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் நோக்கியா, மைக்ரோசிப், பெபால், இன்பினிக்ஸ் உட்பட 8 நிறுவனங்கள் கையெழுத்திட்டுள்ளன.

அமெரிக்காவிலுள்ள சான் பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் இந்த ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.

இவற்றின் மூலம் தமிழ்நாட்டில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையங்கள், உற்பத்தி வசதிகளை இந்த நிறுவனங்கள் மேம்படுத்தும்.

இதன் மூலம் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும், 2030 ஆம் ஆண்டுக்குள் தமிழகத்தை ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றும் இலக்கும் எட்டப்படும்.

ரூ. 450 கோடி முதலீட்டில் நோக்கியா நிறுவனத்துடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் செங்கல்பட்டு மாவட்டத்தில் 100 பேருக்கு வேலைவாய்ப்புகளும், யீல்ட் என்ஜினீயரிங் நிறுவனத்துடன் செய்துகொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் கோயம்புத்தூரில் ரூ. 150 கோடி முதலீட்டில் செமி கண்டக்டர் உற்பத்தித் தொழிற்சாலையும் 300 பேருக்கு வேலைவாய்ப்புகளும், சென்னையில் கீக்மைண்ட்ஸ் நிறுவனத்தின் மூலம் 500 வேலைவாய்ப்புகளும் உருவாக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுபற்றித் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். இந்தப் பதிவில், “சென்னை, கோயம்புத்தூர், மதுரை மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் சுமார் ரூ. 900 கோடிக்கும் அதிகமான முதலீடுகளில் 4,100 புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படவுள்ளன.

நோக்கியா நிறுவனத்தில் ரூ. 450 கோடியில் 100 வேலை வாய்ப்புகளும், பேபால் நிறுவனத்தில் 1,000 வேலை வாய்ப்புகளும், மைக்ரோசிப் நிறுவனத்தில் ரூ. 250 கோடியில் 1,500 வேலைவாய்ப்புகளும், இன்ஃபினிக்ஸ் நிறுவனத்தில் ரூ. 50 கோடியில் 700 வேலைகளும், அப்ளைட் மெட்டீரியல்ஸ் நிறுவனத்தில் 500 வேலைகளும் உருவாக்கப்படவுள்ளன.

சுற்றுப் பயணம் முடிய இன்னும் இரண்டு வாரங்கள் உள்ள நிலையில், தொடர்ந்து முனைந்து, அதிக முதலீட்டாளர்களைத் தமிழ்நாட்டிற்கு ஈர்த்து, ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை நோக்கிய எங்கள் பயணத்தை முன்னெடுத்துச் செல்கிறோம்” என்று மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com