சென்னை மெட்ரோ இரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய வீட்டுவசதி - நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் மனோகர் லால் கட்டார் ஆகியோர் தலைமையில் சென்னையில் இன்று ஆலோசனை நடைபெற்றது.
சென்னை, நந்தனத்தில் உள்ள சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் தலைமையகத்தில் சென்னை மெட்ரோ இரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகளை ஆய்வுசெய்தார்கள்.
கருணாநிதி ஆட்சியில் 2007-ல் ஒப்புதல் அளிக்கப்பட்டு, அப்போதைய துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் 2009ஆம் ஆண்டு ஜுன் மாதம் 54.1 கி.மீ நீளத்திலான சென்னை மெட்ரோ இரயில் திட்டத்தின் முதல் கட்டப் பணிகள் தொடங்கப்பட்டன. அதன் இரண்டு வழித்தடங்களில் முழுமையாக பயணிகள் சேவை இயக்கப்பட்டு வருகிறது. இதில் நாளொன்றிற்கு சராசரியாக 3.1 இலட்சத்திற்கும் மேல் பயணம் செய்துவருகின்றனர்.
இரண்டாம் கட்டமாக, 63,246 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான திட்டத்துக்கு ஒன்றிய அரசு பங்களிப்பை அளிப்பதற்கான ஒப்புதலை தற்போது வழங்கியுள்ளது. இரண்டாம் கட்டமும் செயல்பாட்டிற்கு வரும் நிலையில், மொத்தம் 172 கி.மீ மெட்ரோ இரயில் கட்டமைப்பாக இருக்கும்.
சென்னை புறநகரை ஒட்டிய முக்கியப் பகுதியான விமானநிலையம் முதல் கிளாம்பாக்கம்வரையிலான வழித்தடத்திற்கும், தமிழ்நாட்டின் இரண்டாம் கட்ட நகரங்களான கோயம்புத்தூர் மற்றும் மதுரை நகரங்களில் மெட்ரோ இரயில் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான செயற்குறிப்புகளுக்கும் முன்னுரிமை அளிக்குமாறு மத்திய அமைச்சரிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது என தமிழக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.