முதல்வர் ஸ்டாலின் உரை புறக்கணிப்பு: வைகோ, சீமான் கண்டனம்!

மு.க.ஸ்டாலின், வைகோ, சீமான்
மு.க.ஸ்டாலின், வைகோ, சீமான்
Published on

இலங்கை மலையகத் தமிழர் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலிக்கு தடை விதிக்கப்பட்டத்துக்கு வைகோ, சீமான் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், "பிரிட்டிசாரால் வலுக்கட்டாயமாகக் கொண்டு போகப்பட்டு இலங்கையில் குடியமர்த்தப்பட்ட மலையகத் தமிழர்கள் புலம்பெயர்ந்த 200 வது ஆண்டு தற்போது அனுசரிக்கப்படுகிறது. “நாம் 200 ஒற்றுமை பன்முகத்தன்மை மற்றும் பாரம்பரியத்தின் முழக்கம்” என்ற பெயரில் மூன்று நாட்கள் நிகழ்ச்சிகள் நடந்தது. இந்நிகழ்ச்சியை இலங்கை மலையக தமிழர்களுக்காக இலங்கையின் உள்நாட்டுத் தோட்ட தொழில் துறை மற்றும் அரசு தொழில்துறை அமைச்சகம் முன்னெடுத்தது.

இலங்கையில் உள்ள மலையக தமிழர்களின் உறவு பாலமாக இலங்கை அமைச்சர் ஜீவன் தொண்டமான் முன்னெடுத்த இந்த நிகழ்ச்சியில் மலையக தமிழர்கள் அவர்களின் பூர்வீக தமிழ் பூமி சார்ந்த அரசியல் பிரதிநிதிகளாகத் தமிழ்நாட்டிலிருந்தும் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டது. இதில் தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார். இலங்கை அரசின் பங்களிப்புடன் இலங்கை அமைச்சர் ஜீவன் தொண்டமான் அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்க வேண்டும் என இலங்கை அமைச்சர் ஜீவன் தொண்டமான் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

அதனை ஏற்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக மலைகத் தமிழர்களின் நாம் 200 விழாவிற்கு வாழ்த்துரை வழங்கி அனுப்பியிருந்தார். முதல்வரின் உரை ஊடகங்கள், ஏடுகளுக்கும் அளிக்கப்பட்டிருந்தன. ஆனால் நவம்பர் 3 ஆம் தேதி கொழும்பில் நடைபெற்ற மேற்கண்ட விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் காணொலி உரையை ஒளிபரப்பக் கூடாது என்று மத்திய பா.ஜ.க. அரசு தடை போட்டு விட்டது என இன்று வெளியான இந்து ஆங்கில நாளேடு (06.11.2023) விரிவாக செய்தி வெளியிட்டு இருக்கிறது.

ஆனால், தொப்புள் கொடி உறவுகளான தமிழ்நாட்டு மக்களின் சார்பில் வாழ்த்துரை வழங்கி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அனுப்பிய காணொலி உரையை அந்த விழாவில் ஒளிபரப்ப தடை விதித்ததன் மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலினை சிறுமைப்படுத்துவதற்கு முயன்றுள்ள மத்திய பா.ஜ.க. அரசின் செயல் ஏற்றுக்கொள்ள முடியாதது கடும் கண்டனத்துக்குரியது" எனத் தெரிவித்துள்ளார்.

அதேபோல், இன்று ஈரோட்டில் செய்தியாளர்களைச் சந்தித்த நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமானிடம், இது தொடர்பாக கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “இலங்கை ஜனநாயக நாடு என்று சொன்ன பெருமக்கள் இதற்கு பதில் சொல்ல வேண்டும். தமிழ்நாட்டின் முதலமைச்சர் இலங்கையில் உள்ள தமிழ் மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுப்பதையே தடுக்கிறார்கள் என்றால், அங்கு ஜனநாயகம் எப்படி உள்ளது என்று பாருங்கள். முதல்வருக்கே இந்த நிலைமை என்றால், சாதாரண மக்களின் நிலை என்னவென்று பாருங்கள்.

இந்திய ராணுவத்தில் அனைத்து மொழியினரும் சேர முடியும். ஆனால், இலங்கை ராணுவத்தில் தமிழர்கள் இடம்பெற முடியுமா? அந்த ராணுவம் என் மக்களை எப்படிப் பாதுகாக்கும். அது எப்படி ஜனநாயக நாடு ஆகும்.” என்று சீமான் கேள்வி எழுப்பினார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com