அறிவுலகமா, ஊழல் உலகமா? - த.வெ.க. மாணவர் பாராட்டு விழாவில் முதல்வர் விஜய்!

CM Vijay
முதல்வர் விஜய்
Published on: 

த.வெ.க.வின் இரண்டாம் கட்ட மாணவர் பாராட்டு விழா இன்று சென்னை நீலாங்கரையில் நடைபெற்றது.

பத்தாவது, பன்னிரெண்டாவது வகுப்புகளின் பொதுத்தேர்வுகளில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு த.வெ.க. சார்பில் ஊக்கத்தொகையுடன் கூடிய பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

கடந்த நவம்பர் 4ஆம் தேதி நடைபெற்ற முதல் கட்ட விழாவில் அரியலூா், கடலூா், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய 5 மாவட்டங்களைச் சோ்ந்த மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத் தொகையுடன் கூடிய பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இன்று ஈரோடு, திருப்பூர், கோவை, நீலகிரி, பெரம்பலூர், கரூர், நாமக்கல், சேலம், திருச்சி ஆகிய 9 மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு விருதுகளை முதலமைச்சர் விஜய் வழங்கி வருகிறார்.

இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் விஜய் பேசியதாவது:

"இங்கு ஒரேயொரு விஷயத்தைச் சொல்ல வேண்டும் என்று நினைக்கிறேன். அதை அரசியலாக்க சிலர் நினைப்பார்கள். அரசியலாக்க நினைத்தாலும் அதைப் பற்றி எனக்குக் கவலை இல்லை. இது உங்கள் சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால்தான் சொல்கிறேன். ஊழல் என்பது ஒரு பழைய விஷயம்தான், மக்களும் அதற்குப் பழகி விட்டார்கள் என்று நாம் கடந்துவிட முடியாது. அது ஒரு நீண்ட கால நோய் போன்றது. அதைச் சரிசெய்ய முடியுமா என்று சிலர் கேட்பார்கள். சரிசெய்ய முடியவில்லை என்றாலும், குறைந்தபட்சம் அதைக் கட்டுப்படுத்த முயற்சி செய்யலாம் இல்லையா?

அண்மையில் கல்வித் துறையில் நடைபெற்ற ஊழல் குறித்து கேள்விப்பட்டு இருப்பீர்கள். ஏஐ தொழில்நுட்பத்தை வைத்து வளர்ச்சி இருக்கும் என்ற எதிர்பார்ப்புடன் இருந்தால், ஆரம்ப காலத்திலேயே அதைப் பயன்படுத்தி முறைகேடு புரிந்துள்ளனர். நூலகங்களில் நடைபெறும் முறைகேடுகளைப் பார்த்தால், இது என்ன அறிவுலகமா ? ஊழல் உலகமா?

இதைப் பார்த்துகொண்டு நம்மால் எப்படி சும்மா இருக்க முடியும்? அதுவும் உங்கள் வாழ்க்கையை பாதிக்கும் வகையில் இருந்தால் எப்படி சும்மா இருப்பது?" என்று முதலமைச்சர் விஜய் பேசினார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram