ஆசிய விளையாட்டுப் போட்டியில், தங்கப் பதக்கம் வென்ற இந்திய மகளிர் அணிக்கும், அவ்வணியில் இடம்பெற்றுள்ள தமிழக வீராங்கனைக்கும் முதலமைச்சர் விஜய் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக ஊடகப் பதிவு:
"ஜப்பானில் நடைபெற்றுவரும் 20-வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் மகளிர் கிரிக்கெட் பிரிவில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ள இந்திய மகளிர் அணிக்கும், அவ்வணியில் இடம்பெற்றுள்ள தமிழ்நாட்டின், மதுரையைச் சேர்ந்த வீராங்கனை கமலினிக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
கிரிக்கெட் வீராங்கனை கமலினியின் மகத்தான சாதனையைப் பாராட்டி, தமிழ்நாடு அரசின் சார்பில் உயரிய ஊக்கத்தொகையாக ரூ.75 இலட்சம் வழங்கப்படும்.
இவரைப் போன்ற திறமைமிக்க அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் தமிழ்நாடு அரசு என்றும் உறுதுணையாக நிற்கும். கமலினியின் இந்த வெற்றி, தமிழ்நாட்டு இளைஞர்களுக்கும், மகளிருக்கும் புதிய உத்வேகத்தையும், நம்பிக்கையையும் அளிக்கும். இவர் மேலும் பல சாதனைகள் படைக்க வாழ்த்துகிறேன்!" என்று முதலமைச்சர் விஜய் கூறியுள்ளார்.