அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான காலை உணவு விரிவாக்கத் திட்டத்தை முதலமைச்சர் விஜய், இன்று சென்னையில் தொடங்கி வைத்தார்.
சென்னை திருவான்மியூர் காந்திகிராமத்தில் உள்ள மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில், முதல்வர், மாணவர்களுக்கு உணவு பரிமாறி அவர்களுடன் அமர்ந்து சாப்பிட்டார்.
இத்திட்ட விரிவாக்கத்தின் மூலம், 15,454 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் சுமார் 15.30 இலட்சம் மாணவ, மாணவியர்கள், கூடுதலாகப் பயன்பெறுவர்.
இதற்கென நடப்பு நிதியாண்டில் கூடுதலாக 217 கோடியே 63 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கு ஒட்டுமொத்தமாக 724 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் உணவு பட்டியலில் திங்கட்கிழமை - உப்புமா, செவ்வாய்க்கிழமை- கிச்சடி, புதன்கிழமை - பொங்கல், வியாழக்கிழமை - உப்புமா, வெள்ளிக்கிழமை - இனிப்பு வகை உணவு ஆகியவை மாணவர்களுக்கு வழங்கப்படும்.
இடைத்தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறையில் இருக்கும் செங்கல்பட்டு, திருப்பூர் ஆகிய இரண்டு மாவட்டங்களில் மட்டும், இந்தத் திட்டம் இன்னும் செயல்பாட்டிற்கு வரவில்லை.
மேலும், இந்தத் திட்ட விரிவாக்கம் குறித்த குறுஞ்செய்தி, 6 முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும், அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களின் பெற்றோர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.