
ஒன்றிய அரசால் உத்தேசிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற, சட்டமன்றத் தொகுதி மறுவரையறை குறித்து சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தைப் பரிசீலித்து, அதற்கேற்ப உரிய அரசியலமைப்பு சட்டத் திருத்தத்தை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் கடிதம் அனுப்பியுள்ளார்.
அக்கடிதத்தில், இது தொடர்பாக, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 12.8.2026 அன்று தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது என்றும்,
அத்தீர்மானத்தில், மக்களவையின் மொத்த உறுப்பினர்களின் தற்போதைய எண்ணிக்கையை மாற்றாமல் அதே நிலையில் நிரந்தரமாகத் தொடர்வதற்கும், மாநிலங்களின் தற்போதைய நாடாளுமன்றப் பிரதிநிதித்துவ அளவைப் பாதுகாப்பதற்கும் (அதாவது, மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கு இடையேயான தற்போதைய விகிதாச்சாரப் பகிர்வை ஏற்கெனவே உள்ளவாறே தொடர்வதற்கும்), மக்களவைக்கும் மாநிலங்களவைக்கும் இடையேயான விகிதத்தைப் (2.2 : 1) பேணுவதற்கும், தற்போதைய 543 உறுப்பினர்கள் என்ற எண்ணிக்கையின் அடிப்படையில் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலிலிருந்தே பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவதற்கும் தேவையான உரிய அரசியலமைப்பு சட்டத் திருத்தங்களை மேற்கொள்ளுமாறு ஒன்றிய அரசை வலியுறுத்தியிருப்பதாக முதலமைச்சர் விஜய் அக்கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
மக்கள்தொகைக் கணக்கெடுப்பிற்குப் பின்னர், அரசியலமைப்பின் 81(2)(a)-ஆம் சட்டப்பிரிவைப் பின்பற்றி தொகுதி மறுவரையறை மேற்கொள்ளப்பட்டால், 1967-இல் தமிழ்நாட்டின் நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை 41-லிருந்து 39-ஆகக் குறைக்கப்பட்டது போன்று, தென்னிந்திய மாநிலங்கள் தங்களின் கணிசமான நாடாளுமன்றத் தொகுதிகளை இழக்க நேரிடும் என்று சட்டமன்றப் பேரவையில் விவாதிக்கப்பட்டது என்றும் அக்கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும், மக்கள்தொகைக் கட்டுப்பாட்டுத் திட்டங்களைத் திறம்படச் செயல்படுத்தி, நல்ல பொருளாதார வளர்ச்சியை எய்தி, சிறப்பான சுகாதார மற்றும் பொதுநலத் திட்டங்களை செயல்படுத்தியுள்ள தென்னிந்திய மாநிலங்களுக்கு, 1971-ஆம் ஆண்டிற்குப் பிந்தைய மக்கள்தொகையின் அடிப்படையில் தொகுதி மறுவரையறை மேற்கொள்ளப்பட்டு, தற்போதைய தொகுதிகளின் எண்ணிக்கையை மாற்றியமைக்கும் எந்தவொரு மறுவரையறை நடவடிக்கையும் பெரும் அநீதி இழைப்பதாக அமையுமென்றும் அக்கடிதத்தில் விஜய் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் நகலை இணைத்திருப்பதாகவும் முதலமைச்சர் விஜய் அக்கடிதத்தில் தெரிவித்துள்ளார்.