தேவாவின் மறைவுக்கு முதல்வர் விஜய், கட்சித் தலைவர்கள் இரங்கல்

Deva passed away
தேவா மறைவு
Published on: 

இசையமைப்பாளரும், பாடகருமான தேவாவின் இறப்பு குறித்து பல்வேறு தலைவர்களும் தங்களது சமூக ஊடகப்பக்கங்களில் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

முதல்வர் விஜய்:

"தமிழ்த் திரையுலகின் தனித்துவமான இசையமைப்பாளரும், கானா பாடல்களால் எளிய மக்களின் மனங்களைக் கவர்ந்தவருமான 'தேனிசைத் தென்றல்' தேவா மறைந்த செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும், ஆழ்ந்த வேதனையும் அடைந்தேன்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் 400க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்ததோடு, பல கானா பாடல்களை எழுதி, அவரே பாடியும் உள்ளார்.

கலைமாமணி உட்பட்ட பல்வேறு விருதுகளைப் பெற்ற தேவாவின் இசைப் பயணமும், பாடல்களும் திரையிசை வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும். அவரது மறைவு தமிழ்த் திரையுலகிற்கு பேரிழப்பாகும். இசையமைப்பாளர் தேவாவை இழந்துவாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், திரைத்துறையினருக்கும், இசை ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்."

காங்கிரஸ் மாநிலத் தலைவர் மாணிக்கம் தாகூர்:

”தொண்ணூறுகளின் தலைமுறையைத் தனது துள்ளலான கானா பாடல்களாலும், நெஞ்சை உருக்கும் மெல்லிசையாலும் கட்டிப்போட்ட மாபெரும் இசைக் கலைஞர்.

சாமானிய மனிதர்களின் உணர்வுகளைத் திரையிசையாக மாற்றிய பெருமை அவருக்கு உண்டு. அவரது மறைவு தமிழ்த் திரையுலகிற்கும் இசையுலகிற்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்."

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி:

"எளிய பின்னணியில் இருந்து வந்து, எளிய மக்களின் வாழ்வியலை தன் இசையால் பிரதிபலித்தவர் தேவா. மாஸ், மெலோடி, டிவோசன் என அனைத்து வகையான பாடல்களிலும் தனி முத்திரை பதித்தவர்.

தேவாவின் “கானா” பாடல்களுக்கு துள்ளாத கால்கள் இல்லை என்று சொல்லும் அளவிற்கு அனைவரின் உள்ளங்களிலும் நிறைந்திருக்கிறது அவருடைய இசை.

தேவாவின் மறைவு என்பது ஈடு செய்ய முடியாத பேரிழப்பு. அவரை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்தாருக்கும், திரைத் துறை மற்றும் இசைத் துறையைச் சார்ந்தோருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். மறைந்த அவர்தம் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்."

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram

logo
Andhimazhai
www.andhimazhai.com