மக்களைக் காப்பதே முக்கியம்; எடப்பாடி நையாண்டிக்கு பதில் சொல்லத் தயாரில்லை- ஸ்டாலின் பேட்டி!

மக்களைக் காப்பதே முக்கியம்; எடப்பாடி நையாண்டிக்கு பதில் சொல்லத் தயாரில்லை- ஸ்டாலின் பேட்டி!

புயலை எதிர்கொண்டுள்ள சூழலில் மக்களைக் காப்பதுதான் முக்கியம் என்றும் எடப்பாடியின் நையாண்டிக்கெல்லாம் பதில்கூறத் தயாராக இல்லை என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார். 

வட கடலோர மாவட்டங்களில் புயல் தாக்கம் உருவாகியுள்ள நிலையில், அதை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகளில் அரசு ஈடுபட்டுள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், இராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு இந்தப் பணிகளை மேற்கொள்ள அமைச்சர்களை முதலமைச்சர் அனுப்பிவைத்துள்ளார். 

புயல் நடவடிக்கைகளை சென்னை, சேப்பாக்கம் பேரிடர் கட்டுப்பாட்டு மையத்திலிருந்து அமைச்சர் சாத்தூர் இராமச்சந்திரன் ஒருங்கிணைத்து வருகிறார். இன்று மாலையில் அங்கு சென்ற முதலமைச்சர் ஸ்டாலின், பாதிக்கப்படக்கூடிய மாவட்டங்களின் ஆட்சியர்களுடன் காணொலி மூலம் பேசி விவரங்களைக் கேட்டறிந்தார். 

பின்னர், செய்தியாளர்களிடம் அரசின் நடவடிக்கைகளை விவரித்தார். 

சென்னையில் 4 ஆயிரம் கோடி ரூபாய் செலவிட்டும் மழைநீர் வடிகால் பணிகள் பயனில்லையென எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கூறியுள்ளாரே எனக் கேட்டதற்கு, ”அரசியல் பேச நான் விரும்பவில்லை. மக்களை முதலில் பாதுகாக்கணும். மக்களைக் காக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறோம். அதற்குதான் வந்திருக்கிறேனே தவிர, அவர்கள் சொல்லும் அரசியல் நையாண்டிகளுக்கும் கேள்விகளுக்கும் பதில்களுக்கும் விளக்கம் சொல்ல நான் தயாராக இல்லை.” என்றார் முதலமைச்சர். 

ஆட்சியர்களுடன் முதலமைச்சர் காணொலிப் பேச்சு
ஆட்சியர்களுடன் முதலமைச்சர் காணொலிப் பேச்சு

வடிகால்களில் குப்பைகளால் அடைப்பு ஏற்பட்டிருக்கிறதே என ஒரு செய்தியாளர் கேட்டதற்கு, ”புதிதாகப் போட்டிருக்கிறோம். பழையவற்றில் அடைப்பு இருக்கலாம். அக்கம்பக்கமாக தூர்வாரும் பணி நடந்துவருகிறது.” என்று முதலமைச்சர் ஸ்டாலின் பதில் கூறினார். 

சென்னையில் மிக கன மழை பெய்யும் எனக் கூறப்பட்டிருக்கிறதே; மழைநீர் தேக்கத்தை அகற்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறதா என ஒருவர் கேட்க, தேவையான இடங்களில் மோட்டார் பம்புகள் உட்பட எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன என்றார் அவர். மேலும், ஆயிரம் பம்புசெட்டுகள் தயாராக இருப்பதாக தலைமைச்செயலாளர் கூற, முதலமைச்சரும் அதை வழிமொழிந்தார். 

வெளிமாவட்டங்களிலிருந்து பணியாளர்கள் அழைக்கப்பட்டிருக்கின்றனரா என்ற கேள்விப் பகுதிக்கு, “ஏற்கெனவே பேரிடர் மேலாண்மைக் குழுவினர் வந்திருக்கிறார்கள். அவர்களை அதிக மழை பெய்யும் இடங்களுக்கு ஒவ்வொரு மாவட்டத்துக்கும் அனுப்பிவைத்திருக்கிறோம்.” என்ற முதலமைச்சர், 

தேவைப்பட்டால் மத்திய அரசின் உதவி கேட்கப்படுமா என்றதற்கு, நிச்சயமாக என்றும் கூறினார். 

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com