காவல்துறை முதலமைச்சர் ஆய்வுக் கூட்டம்
காவல்துறை முதலமைச்சர் ஆய்வுக் கூட்டம்

போதைப்பொருள் முக்கிய பிரச்னை - அதிகாரிகளிடம் முதலமைச்சர் ஸ்டாலின் அழுத்தம் !

போதைதான் அதிகமான குற்றங்களுக்குத் தூண்டுகோலாக இருக்கிறது; எனவே போதைப்பொருள் தடுப்பு என்பது குற்றத்தடுப்பில் மிக முக்கியமானது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.

செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களின் சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்து, சென்னையை அடுத்த மறைமலைநகரில் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று மாலையில் ஆய்வுக்கூட்டம் நடத்தினார். அப்போது, இந்த மூன்று மாவட்டங்களும் தொழில் வளர்ச்சி அதிகம் வாய்ப்புள்ளவை என்றும், இங்கு குற்றங்கள் நிகழ வாய்ப்புகளும் காரணங்களும் அதிகமாக இருக்கின்றன என்றும் எனவே காவல்துறை அதிக கவனத்தோடு இருக்கவேண்டும் என்றும் அவர் கூறினார்.

”பள்ளிகள் கல்லூரிகள் அருகே பெட்டி கடைகளில் போதைப் பொருட்களை விற்பனை செய்வோர் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். 'சில இடங்களில் காவல் துறையினருக்குத் தெரியாமல் இதுபோன்ற நிகழ்வுகள் நடக்க வாய்ப்பில்லை' என்பதை சிலர் பெரிய குற்றச்சாட்டாகப் பரப்பி வருகிறார்கள். இதை நான் நம்பவில்லை என்றாலும், உயர் அதிகாரிகளாகிய நீங்கள் அதைத் தீவிரமாகக் கண்காணித்திட வேண்டும்.

இதுபோன்று கஞ்சா மற்றும் போதைப் பொருட்கள் புழங்கும் பகுதிகள் கண்டறியப்படும் நேர்வுகளில், சம்பந்தப்பட்ட பகுதியைச் சார்ந்த காவல் துறையினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று காவல்துறை தலைவரை நான் கேட்டுக்கொள்கிறேன். இதில் எவ்விதமான சமரசமும் ஏற்கதக்கதல்ல.

வாரந்தோறும் நடைபெறும் ஒருங்கிணைப்புக் கூட்டத்தில், போதைப் பொருட்கள், குட்கா, பான்மசாலா தடுப்பு குறித்த நடவடிக்கைகளை ஆய்வு செய்வதோடு, அவை தொடர்பாக எடுக்கப்பட்ட தொடர் நடவடிக்கைகள் குறித்தும் உள்துறை செயலருக்கு அறிக்கை அனுப்பி வைக்கவேண்டும். உள்துறைச் செயலரும், தலைமைச் செயலரும் அதன் மீது தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதை இவ்வளவு விரிவாக நான் சொல்வதற்குக் காரணம், பல்வேறு நிகழ்வுகளில் குற்றங்களுக்கு மையப்புள்ளியாக போதைப் பொருள்கள் இருக்கின்றன. போதைதான் அதிகமான குற்றங்களுக்கு தூண்டு கோலாக இருக்கிறது. எனவே போதைப் பொருள் தடுப்பு என்பது குற்றத்தடுப்பில் மிக முக்கியமானது!

எனவே, "எங்கள் மாவட்டத்தில் போதைப் பொருள் நடமாட்டம் இல்லை" என்று ஒவ்வொரு மாவட்ட எஸ்.பி.யும் உறுதி எடுத்து தடுத்துக் காட்ட வேண்டும்.” என்று முதலமைச்சர் தீவிரமாகவே பேசினார்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com