கோவை மேம்பாலத்துக்கு ஜி.டி. நாயுடு பெயர் வைத்தது ஏன்? - அமைச்சர் எ.வ.வேலு விளக்கம்!

அமைச்சர் எ.வ. வேலு
அமைச்சர் எ.வ. வேலு
Published on

கோவை அவினாசி பாலத்துக்கு ஜி.டி. நாயுடு பெயர் வைத்தது தொடர்பாக அமைச்சர் எ.வ.வேலு விளக்கமளித்துள்ளார்.

பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று விமானம் மூலம் கோவை வந்தடைந்தார். அவரை விமான நிலையத்தில் அமைச்சர் எ.வ.வேலு, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் வரவேற்றனர்.

அப்போது அமைச்சர் எ.வ.வேலு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர், “நோயாளி என்று சொல்வதற்குப் பதிலாக பயனாளி என்று சொல்வதில் என்ன தவறு? காலத்திற்கு ஏற்ப மொழி வளர்ச்சி அவசியம். ஆனால், எடப்பாடியாருக்கு அதைப் புரிந்து கொள்ளும் சக்தி இல்லை. கம்பராமாயணத்தை எழுதியவர் சேக்கிழார் என்று சொல்லும் அவருடைய தமிழ் ஆற்றல் அவ்வளவு தான்.” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “முதலமைச்சர் மதுரையில் கலைஞர் நூலகம், கோவையில் பெரியார் நூலகம், சேலத்தில் பாரதிதாசன் நூலகம், கடலூரில் அஞ்சலையம்மாள் நூலகம், திருச்சியில் காமராசர் நூலகம், நெல்லையில் காயிதே மில்லத் நூலகம் என அனைத்து தலைவர்களின் பெயர்களை நன்றி உணர்வோடு வைத்துள்ளார். ஆனால், எடப்பாடி எம்ஜிஆர் படத்தைப் ஸ்டாம்ப் சைஸில் கூட போடாதவர். ‘சின்னம்மா, சின்னம்மா’ என்று வாய் நிறைய அழைத்து விட்டு ஏறி வந்த ஏணியை எட்டி உதைத்தவர்” என்று கிண்டலாகக் குறிப்பிட்டார்.

முதலமைச்சர் இன்று திறந்து வைத்த ஜி.டி.நாயுடு நான்கு வழி மேம்பாலத்திற்கு சாதி பெயர் வைத்தது குறித்து கேட்டதற்கு, “இந்த பெயர் வைப்பதால் ஏற்படும் சர்ச்சை குறித்த ஏற்கனவே ஆலோசிக்கப்பட்டது. பொதுவாக ஜி.டி.நாயுடு என்றே அவரை அழைப்பார்கள். அதனால், முதலமைச்சர் அந்த பெயரை வைத்தார். பெயர் மாற்றம் செய்யப்பட வேண்டும் என்றால் அவரது குடும்பத்தினருடன் கலந்தாலோசித்த பிறகே மீண்டும் முடிவு எடுக்கப்படும்.” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “இந்த பாலம் அமைப்பது அதிமுகவின் திட்டமாக இருந்தாலும், அவர்கள் 5 சதவீதப் பணிகளை மட்டுமே முடித்திருந்தனர். அதனை விரைந்து கட்டி முடித்தது திமுக தான். மாற்றாந்தாய் போல் நடந்து கொள்வது அதிமுகவின் பழக்கம், திமுக அனைவரையும் அரவணைத்து செல்லும் கட்சி” என்றார்.

இதையடுத்து அவரிடம் அதிமுக - பாஜக கூட்டணி குறித்து கேட்டதற்கு, “அதிமுகவின் கூட்டணி வலுவானதா, அல்லது நஞ்சு போனதா என்பதை தேர்தல் முடிந்த பின் மக்களே பார்ப்பார்கள். இந்த முறையும் திமுக கூட்டணி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும் என்பதில் சந்தேகமில்லை” என தெரிவித்தார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com