கோவை புதிய மேயர் ரங்கநாயகி
கோவை புதிய மேயர் ரங்கநாயகி

கோவைக்கும் புது மேயர்... ரங்கநாயகிக்கு பதவி!

Published on

நெல்லை மாநகராட்சி மேயரைத் தொடர்ந்து கோவையிலும் புதிய மேயர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

கோவை மாநகராட்சி மன்றத்தின் 29ஆவது வட்ட உறுப்பினராக இருந்துவரும் ரங்கநாயகிக்கு மேயர் பதவி கிடைத்துள்ளது.

முன்னதாக, பழைய மேயர் கல்பனா மீது உட்கட்சியிலேயே ஏகப்பட்ட அதிருப்திக் குற்றச்சாட்டுகள் வெளியாகின. ஒரு கட்டத்தில் அவருடைய கணவரின் தலையீடு உட்பட பல விவகாரங்கள் பொதுவெளியில் வெடித்தன.

இதனிடையே மக்களவைத் தேர்தலும் வந்தநிலையில், அதில் சரிவரப் பணியாற்றாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தி.மு.க. தலைமை எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்தப் பின்னணியில் கல்பனா தன் மேயர் பதவியிலிருந்து விலகினார். காலியான மேயர் பதவிக்கு யாரைத் தேர்வுசெய்வது என்பது பற்றி தி.மு.க. கவுன்சிலர்களுக்கு தலைமையிலிருந்து அமைச்சர்கள் நேரு, முத்துசாமி ஆகியோர் மூலம் அறிவுறுத்தல் அளிக்கப்பட்டது.

கோவை மேயர் பதவிக்கான தேர்தலுக்காக இரங்கநாயகி மட்டுமே மனுத்தாக்கல் செய்திருந்தார். இன்றுவரை வேறு யாரும் போட்டியிடாததால் அவரே மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கோவை மாநகராட்சியில் மொத்தம் 100 வட்டங்கள் உள்ளன. இதில் அ.தி.மு.க.-3, எஸ்.டி.பி.ஐ.-1 என நான்கு பேரைத் தவிர மற்ற அனைவரும் தி.மு.க. கூட்டணியைச் சேர்ந்தவர்கள்தான் என்பதால், ரங்கநாயகி ஒருமனதாக மேயராகத் தேர்வுசெய்யப்பட்டார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com