கோவை பி.எஸ்.ஜி. தொழில்நுட்பக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவரை சீண்டல்வதை செய்ததற்காக 7 மாணவர்கள் தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
கோவை-அவினாசி சாலையில் உள்ள பி.எஸ்.ஜி. தொழில்நுட்பக் கல்லூரி, நாடளவில் புகழ்பெற்றது. இந்தக் கல்லூரியில் சேர்வதற்கு மாநில அளவில் மாணவர்களிடையே போட்டி உண்டு. வெளியூர்களில் இருந்து வரும் ஆண்- பெண் மாணவர்கள் தங்கிப் படிக்க கல்லூரி வளாகத்துக்குள் தனித்தனி விடுதிகள் உள்ளன.
திருப்பூர் மாவட்டம் அவினாசியைச் சேர்ந்த ஒரு மாணவர், விடுதியில் தங்கி இரண்டாம் ஆண்டு பொறியியல் படித்து வருகிறார். கடந்த 6ஆம் தேதி இரவு, இவரின் அறைக்கு, மூன்றாம், நான்காம் ஆண்டுகள் படித்துவரும் மாணவர்கள் 7 பேர் சென்று, அந்த மாணவரிடம் மது குடிக்க பணம் கேட்டுள்ளனர்.
அந்த மாணவர், தன்னிடம் பணம் எதுவும் இல்லை என்று கூறவே, 7 பேரும் சேர்ந்து அவரைக் கடுமையாகத் தாக்கியுள்ளனர். அத்துடன் நிற்காமல் மொட்டையடித்து, நிர்வாணப்படுத்தி சித்திரவதை செய்துள்ளனர். அதை வீடியோ பதிவும் செய்து பணம் கேட்டு மிரட்டினர்.
அந்த மாணவர் தனக்கு நடந்த கொடுமை குறித்து தன் பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் நேற்று காலையில் கோவைக்குச் சென்றனர். ராகிங் கொடுமை குறித்து பீளமேடு காவல்நிலையத்தில் புகார் செய்தனர்.
காவல்துறையினர் நடத்திய விசாரணையில், ராகிங் செய்த மணிகண்டன், நித்யானந்தன், அய்யப்பன், தரணீதரன், சந்தோஷ், வெங்கடேஷ், யாஜீஸ் ஆகிய 7 பேர்தான் குற்றத்தில் ஈடுபட்டது உறுதியானது. அவர்களை காவல் துறையினர் கைதுசெய்தனர்.
அவர்கள் மீது ராக்கிங் செய்தல், ஆபாசமாகப் பேசுதல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்பட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இத்துடன், கைதான 7 மாணவர்களையும் அந்தக் கல்லூரி நிர்வாகம் தற்காலிக நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.