பரனூர் சுங்கச்சாவடி
பரனூர் சுங்கச்சாவடி

பரனூர் சுங்கச்சாவடியில் விதிகளுக்கு முரணாக ரூ.28 கோடி வசூல்! – அன்புமணி கண்டனம்

செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடியில் விதிகளுக்கு முரணாக ரூ.28 கோடி கூடுதல் சுங்கக்கட்டணம் வசூலிக்கப்பட்டிருப்பதுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னையை அடுத்த செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடியில் விதிகளுக்கு முரணாக ரூ.28 கோடி கூடுதல் சுங்கக்கட்டணம் வசூலிக்கப்பட்டிருப்பது இந்திய தலைமைக் கணக்காயரின் தணிக்கை அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது. தென் மாநிலங்களில் உள்ள ஐந்து சுங்கச்சாவடிகளில் இருந்து மட்டும் ரூ.132 கோடி கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டிருக்கிறது. அரசு நிறுவனமே விதிகளை மதிக்காமல் அப்பாவி மக்களிடம் சுங்கக் கட்டணக் கொள்ளையில் ஈடுபட்டு வருகிறது” என தெரிவித்துள்ளவர் அதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேலும், ”திருத்தப்பட்ட சுங்கக்கட்டண விதிகளின்படி, நான்கு வழிச்சாலைகள் ஆறுவழிச் சாலைகளாகவோ, எட்டுவழிச் சாலைகளாகவோ தரம் உயர்த்தப்படும் போது, கட்டுமானப் பணிகள் முடிவடையும் வரை, ஏற்கனவே வசூலிக்கப்பட்ட சுங்கக் கட்டணத்தில் 75% மட்டுமே வசூலிக்கப்பட வேண்டும். ஆனால், தாம்பரம் - திண்டிவனம் இடையே இரு இடங்களில் நான்குவழிச் சாலையை எட்டுவழிச் சாலையாக்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அப்பகுதியில் சுங்கக்கட்டணத்தைக் குறைக்காமல் வழக்கமான கட்டணத்தை தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் வசூலித்திருக்கிறது. 2018 ஆகஸ்ட் முதல் 2021 மார்ச் வரை மட்டும் ரூ.6.54 கோடி கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது. அதேபோல், 1956-ஆம் ஆண்டுக்கு முன் கட்டப்பட்ட பாலங்களுக்கு சுங்கக்கட்டணம் வசூலிக்கக் கூடாது என்ற விதிகளை மீறி மதுராந்தகம் அருகில் 1954-ஆம் ஆண்டு கட்டப்பட்ட பாலத்திற்கு 2017-2021 காலத்தில் ரூ.22 கோடி கட்டணம் வசூலிக்கப்பட்டிருப்பதாக தலைமை கணக்காயர் அறிக்கையில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

தேசிய நெடுஞ்சாலைகளில் நடைபெறும் இத்தகைய சுங்கக்கட்டணக் கொள்ளை அதிர்ச்சியளிக்க வில்லை. அதற்கு காரணம், எந்தெந்த வழிகளில் எல்லாம் முடியுமோ, அந்தந்த வழிகளில் எல்லாம் சுங்கக் கட்டணக் கொள்ளைநடக்கிறது என்பது உலமறிந்த உண்மை என்பது தான். விதிகளை மதிக்காமல் பரனூர் சுங்கச்சாவடி மூன்று ஆண்டுகளில் மட்டும் ரூ.28 கோடி கூடுதல் கட்டணத்தை தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் வசூலித்திருக்கிறது என்றால், சுங்கச்சாவடிகளில் கணக்கில் வராமல் பெருந்தொகை வசூலிக்கப்பட்டிருப்பதாக கடந்த காலங்களில் எழுப்பப்பட்ட குற்றச்சாட்டுகளும் உண்மை என்று தான் நம்பத் தோன்றுகிறது. அவ்வாறு நம்புவதற்கான நியாயமான காரணங்கள் உள்ளன.

செங்கல்பட்டு பரனூருக்கும், திண்டிவனம் ஆத்தூருக்கும் இடையிலான சாலையின் பயன்பாட்டுக்காக 2005-ஆம் ஆண்டு முதல் சுங்கக்கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த இரு சுங்கச்சாவடிகளிலும் கடந்த 2005-ஆம் ஆண்டு முதல் 2018-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரையிலான 13.50 ஆண்டுகளில் ரூ.1098 கோடி மட்டுமே சுங்கக்கட்டணமாக வசூலிக்கப்பட்டிருப்பதாக நெடுஞ்சாலைகள் ஆணையம் தெரிவித்திருக்கிறது. அதாவது சராசரியாக ஒரு நாளைக்கு ரூ.11 லட்சம் மட்டுமே வசூலிக்கப்பட்டதாக தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்கீழ் வெளியிட்ட பதிலில் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் கூறியுள்ளது. சாலைப் போக்குவரத்து குறித்து அடிப்படை புரிதல் உள்ளவர்கள் இதை ஏற்க மாட்டார்கள்.

செங்கல்பட்டு சுங்கச்சாவடியையும், திண்டிவனம் சுங்கச்சாவடியையும் ஒவ்வொரு நாளும் சராசரியாக 1.20 லட்சம் ஊர்திகள் கடப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இவ்வளவு ஊர்திகள் செல்லும் இந்த சாலையில் ஒரு நாளைக்கு ரூ.11 லட்சம் மட்டுமே கட்டணமாக வசூலாவதாக கணக்கு காட்டப் பட்டால், அதில் எந்த அளவுக்கு முறைகேடுகள் நடைபெற்றிருக்கும் என்பதை யூகித்துக் கொள்ள முடியும். செங்கல்பட்டு மற்றும் திண்டிவனம் சுங்கச்சாவடிகளில் மட்டுமில்லாமல் இந்தியா முழுவதுமே சுங்கச் சாவடிகளின் கட்டண வசூல்கள் இப்படித் தான் பராமரிக்கப்படுகின்றன. சுங்கச்சாவடிகளில் வசூலிக்கப் படும் சுங்கக் கட்டணத்தில் பாதியாவது கணக்கில் காட்டப்படுமா? என்பதே ஐயமாகத் தான் இருக்கிறது.

அதுமட்டுமின்றி, வசூலிக்கப்படும் கட்டணத்திற்கும் பல்வேறு கணக்குகள் காட்டப்படுகின்றன. எடுத்துக் காட்டாக, செங்கல்பட்டு & திண்டிவனம் இடையிலான தேசிய நெடுஞ்சாலையின் பகுதியை அமைக்க ஆன செலவு ரூ.536 கோடி மட்டும் தான். ஆனால், பதிமூன்றரை ஆண்டுகளில் ரூ.1098 கோடி சுங்கக் கட்டணம் வசூலிக்கப்பட்ட நிலையில், அதற்காக செய்யப்பட்ட முதலீடு எடுக்கப்பட்டிருக்க வேண்டும்.

ஆனால், மொத்த வசூலான ரூ.1098 கோடியில், ரூ.682 கோடி பராமரிப்பு பணிகளுக்காக செலவிடப் பட்டு விட்டதாகவும், ரூ.416 கோடி மட்டும் தான் முதலீடாக திரும்பப் பெறப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது. மேலும், முதலீட்டுக்காக செலவிடப்பட்ட தொகை வட்டியுடன் சேர்ந்து ரூ.770 கோடியாக அதிகரித்து விட்டதாகவும், அதை ஈடு செய்ய இன்னும் ரூ.354 கோடி வசூலிக்கப்பட வேண்டும் என்று கணக்கு காட்டப்பட்டது.

இவ்வாறு கணக்கு காட்டப்பட்டால், இந்தியாவில் ஒரு சாலைக்குக் கூட கற்பனைக்கு எட்டிய காலம் வரை, முதலீட்டை திரும்ப எடுக்க முடியாது என்பது தான் உண்மையாகும்.

சுங்கச்சாவடிகளும், அவற்றில் வசூலிக்கப்படும் கட்டணங்களும் மர்மமாகவே நீடிப்பதை அனுமதிக்க முடியாது. சுங்கக்கட்டண கணக்கு மேலாண்மை என்பது வெளிப்படைத்தன்மையுடன் இருக்க வேண்டும் என்பது மட்டுமின்றி, சுங்கக் கட்டணம் என்ற பெயரில் மக்களின் பணம் கொள்ளையடிக்கப்படக்கூடாது. எனவே, பரனூர் சுங்கச்சாவடியில் தொடங்கி இந்தியா முழுவதும் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளிலும் வசூலிக்கப்படும் சுங்கக்கட்டணம் குறித்து தணிக்கை செய்யப்பட வேண்டும். அதன்மூலம் முதலீடு எடுக்கப்பட்ட சுங்கச்சாவடிகளை அடையாளம் கண்டு அவற்றில் சுங்கக்கட்டணத்தை நீக்க வேண்டும்.” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com