கோர்ட்டுக்கு அலைய வச்சுடுவேன்… மிரட்டிய வேட்பாளர் மீது வழக்கு!
காவலர்களுக்கு மிரட்டல் விடும் ஏ.பி.முருகானந்தம்

கோர்ட்டுக்கு அலைய வச்சுடுவேன்… மிரட்டிய வேட்பாளர் மீது வழக்கு!

தேர்தல் அதிகாரிகளை மிரட்டியது தொடர்பாக திருப்பூர் பா.ஜ.க. வேட்பாளர் ஏ.பி.முருகானந்தம் மீது வழக்கப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வரும் 19 ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. இதனால், தேர்தல் பணிகளில் அலுவலர்கள், காவல் துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் ஈரோடு கோபிசெட்டிபாளையம் பகுதியில் போலீசாருடன் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு காரில் வந்த திருப்பூர் பா.ஜ.க. வேட்பாளர் ஏ.பி. முருகானந்தம் வந்தார். அவரது காரை சோதனை செய்வதற்காக ஓரமாக நிறுத்துமாறு தேர்தல் கண்காணிப்பு நிலைக்குழுவினர் கூறினர். இதனால் கோபமைடந்த ஏ.பி. முருகானந்தம் கண்காணிப்பு நிலைக்குழுவினரை மிரட்டும் தொனியில் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.

ஏ.பி.முருகானந்தம் காரில் இருந்து கொண்டே, கண்காணிப்பு அலுவலரை பார்த்து, “உங்க பெயர் என்னன்னு சொல்லுங்க… என்னவா இருக்கீங்க” என்று கேட்க, அதற்கு காவலர், “புகழேந்தி” என பதிலளித்தார்.

உடனே, ஏ.பி.முருகானந்தம், “உங்களை மிரட்ட சொல்லி சொன்னாங்களா” என ஆவேசமாக கேட்க, அதற்கு அந்த காவலர்,”நாங்க மிரட்டவெல்லாம் இல்லை... செக் பண்ண சொல்றாங்க... நாங்க செக் பண்றோம்.” என்றதும், கார் கதவை திறந்த முருகானந்தம், ”மரியாதையாக பேசி பழக வேண்டும்.. புரியுதா?.. இல்லையெனில் வாழ்நாள் முழுவதும் கோர்ட்டுக்கு அலைய வைத்து விடுவேன். சரியா?... அப்போது, பதில் அளித்த போலீசார், "சார்.. நாங்கள் மரியாதையாக தானே பேசுகிறோம்.. அங்கே டிராபிக் ஆவதால் இங்கே ஓரமாக வரத்தான் சொன்னோம்.. யாரையுமே நாங்கள் மரியாதை குறைவாக பேசவில்லை" என்று கூற.. மீண்டும் பேசிய ஏபி முருகானந்தம், "மரியாதையாக பேசுங்க… மரியாதையா பேசுங்க… என்று சொல்லியபடி... உங்க கிட்ட நான் பேசினேனா… இவருகிட்ட தானே பேசிட்டு இருக்கேன்…"என்று கத்தினார். தொடர்ந்து போலீசார் சமாதானப்படுத்திய பின்னர் அங்கிருந்து கிளம்பி சென்றார்.

தேர்தல் ஆணைய பணியாளர்களிடம் பா.ஜ.க. வேட்பாளர் ஏ.பி.முருகானந்தம் மிரட்டும் வகையில் பேசியிருப்பது தொடர்பாக குன்னத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக ஈரோடு மாவட்ட ஆட்சியர் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், ஏ.பி.முருகானந்தம் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com