திருவண்ணாமலை, மேல்மா கூட்டுச்சாலையில் போலீஸ் குவிப்பு
திருவண்ணாமலை, மேல்மா கூட்டுச்சாலையில் போலீஸ் குவிப்பு(கோப்புப் படம்)

’மேல்மா விவசாயிகள் மீது தமிழக அரசு அடக்குமுறை செலுத்துவதா?’

செய்யாறு சிப்காட் விரிவாக்கத்திற்காக நிலம் கையகப்படுத்துவதை கைவிட வேண்டும்; உழவர்களை தொடர்ந்து கொச்சைப்படுத்தி வரும் பொதுப்பனித்துறை அமைச்சர் எ.வ.வேலுவை பதவி நீக்க வேண்டும் என்று போராடிவரும் விவசாயிகள் மீது தமிழக அரசு தொடர்ந்து அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவி்டுகிறது. தங்களின் கோரிக்கைகள் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து மனு கொடுக்கச் சென்ற 18 பெண்கள் உட்பட்ட 20 பேரை காவல்துறை கைதுசெய்திருப்பது கண்டிக்கத்தக்கது என்று பா.ம.க. தலைவர் அன்புமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

” திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு சிப்காட் வளாகத்தை விரிவுபடுத்துவதற்காக மேல்மா, தேத்துறை, இளநீர்குன்றம், குறும்பூர், நர்மாபள்ளம், அத்தி, வீரம்பாக்கம் உட்பட்ட 11 கிராமங்களில் உள்ள 2,700 ஏக்கர் நிலங்களைக் கையகப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில், அதைக் கண்டித்து அந்த கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள்  கடந்த 200 நாட்களுக்கும் மேலாக மேல்மா கூட்டுச் சாலையில் காத்திருப்புப் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர். இது ஒருபுறமிருக்க, மேல்மா பகுதியில் போராடுபவர்களும், இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டவர்களும் வெளியூரைச் சேர்ந்தவர்கள்; அவர்கள் பெயரில் நிலம் இல்லை என்று சட்டப்பேரவையில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு கூறியதால் உழவர்கள் போர்க்கோலம் பூண்டுள்ளனர். இது தொடர்பாக முதலமைச்சரை சந்தித்து மனு அளிக்க சென்னை புறப்பட்ட அவர்களை காவல்துறை தடுத்து நிறுத்தியதைக் கண்டித்து  சந்திரன், மணிகண்டன், தேவன், பெருமாள், ராஜா, ரேணுகோபால், நேதாஜி, ஏழுமலை,  மாசிலாமணி, கணேஷ் ஆகிய 10 உழவர்கள் மேல்மா கூட்டுச் சாலையில் சாகும்வரை உண்ணாநிலை மேற்கொண்டனர்.

உழவர்களின் இந்தப் போராட்டத்தில் எந்த விதிமீறலும் இல்லை. அவர்களின் நலனில் தமிழக அரசுக்கு அக்கறை இருந்தால் அவர்களை அழைத்துப் பேசியிருக்க வேண்டும். ஆனால், அவர்கள் உண்ணாநிலை மேற்கொண்டுள்ள மேல்மா கிராமத்திற்கு நேற்றிரவு சென்ற காவல்துறை அவர்களில் இரு உழவர்களை கட்டாயமாக கைதுசெய்து வந்தவாசி மருத்துவமனையில் அனுமதித்ததனர். மீதமுள்ள 8 உழவர்களை இன்று அதிகாலை கைது செய்த காவல்துறை, திருவண்ணாமலை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். கண்டனம் தெரிவித்ததால் 8 உழவர்கள் மட்டும் விடுதலை செய்யப்பட்டனர். அவர்கள் மேல்மா போராட்டக் களத்திற்குச் சென்று காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் நிலையில், அவர்களுக்கு பதிலாக வேறு 10 பேர் சாகும்வரை உண்ணாநிலை போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ளது.

இதனிடையே, தொடர்ந்து விவசாயிகளை கொச்சைப்படுத்தி பேசிவரும் அமைச்சர் வேலுவைப் பதவிநீக்க வேண்டும்; அவரது பேச்சை அவைக் குறிப்பிலிருந்து நீக்கவேண்டும்; மேல்மா சிப்காட் திட்டத்தைக் கைவிட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை, தலைமைச்செயலகம் முன்பாக 18 பெண்களும், பாண்டியன், அருள் ஆறுமுகம் ஆகிய உழவர்களும் இன்று காலை போராட்டம் நடத்தினர். தங்களின் கோரிக்கைகள் குறித்து முதலமைச்சரைச் சந்தித்துப் பேச அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி முழக்கமிட்டனர். உடனடியாக அவர்களைக் கைதுசெய்த காவல்துறையினர் சிங்காரத் தோட்டம் என்ற இடத்தில் அடைத்து வைத்துள்ளனர். தங்களை விடுதலை செய்தாலும்கூட, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைச் சந்திக்காமல் வீடு திரும்பப் போவதில்லை என்று பெண் விவசாயிகள் அறிவித்துள்ளனர்.

மேல்மா உழவர்கள் விவகாரத்தில் தமிழக அரசு கடைபிடித்துவரும் அணுகுமுறை கண்டிக்கத்தக்கது. இந்த விவகாரத்தில் தொடக்கம் முதலே தமிழக அரசு தவறுக்கு மேல் தவறு செய்துவருகிறது. இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாதவகையில் மேல்மா விவசாயிகள் 7 பேரை தமிழக அரசு குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தது; பா.ம.க. எதிர்ப்பு தெரிவித்த பிறகு அவர்களை விடுதலைசெய்தது; காலம்காலமாக விவசாயம் செய்தவர்களை உழவர்களே அல்ல என்று அமைச்சரே கொச்சைப்படுத்தியது;  நியாயம் கேட்டு மேல்மாவிலும், சென்னையிலும்  போராட்டம் நடத்தியவர்களைக் கைதுசெய்து அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டிருப்பது உட்பட்ட தமிழக அரசின் எந்த நடவடிக்கையையும் நியாயப்படுத்த முடியாது.

தமிழ்நாடு பசியின்றி இருப்பதை உறுதிசெய்பவர்கள் உழவர்கள் தான். அவர்களின் கோரிக்கைகளுக்கு  அரசு முன்னுரிமை அளிக்க வேண்டும். ஆனால், உழவர்களைப் பற்றி சட்டப்பேரவையில் அமைச்சர் வேலு பேசியபோது, அதற்கு எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் முதலமைச்சர் ஸ்டாலின் வேடிக்கைபார்த்துக் கொண்டிருந்தார். அமைச்சருக்கு எதிரான தங்களின் கோரிக்கைகளை முதலமைச்சரிடம் தெரிவிப்பதற்கு விரும்புவதாக உழவர்கள் கூறிய நிலையில், உடனடியாக அவர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அழைத்துப் பேசியிருக்க வேண்டும். ஆனால், அதை செய்யாமல் அவர்களைக் கைதுசெய்து அடைத்து வைக்க ஆணையிட்டதன் மூலம், தமது அரசு விவசாயிகளுக்கு எதிரான அரசு என்பதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சொல்லாமல் சொல்கிறாரோ என்ற எண்ணமும், ஐயமும் தான் ஏற்படுகிறது.

சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் நிறைவடைந்துவிட்ட நிலையில், முதல்வர் நினைத்திருந்தால் அதன் பின்னர் மேல்மா உழவர்களை சந்தித்து பேசியிருக்க முடியும். ஆனால், உழவர்கள் மீது அடக்குமுறையை கட்டவிழ்த்து விடுவதன் மூலம் அவர்களை அடக்கி விட முடியும் என்று முதலமைச்சர் நம்புவதாகக் கூறப்படுகிறது. அவ்வாறு நினைத்தால் அவர் நிச்சயம் தோல்வியடைவார். உழவர்கள் சக்திக்கு முன்பாக எந்த சக்தியும் வெற்றி பெற முடியாது. இதை உணர்ந்து மேல்மா உழவர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அழைத்துப் பேச வேண்டும்; அவர்களின் கோரிக்கைகளில் சாத்தியமானவற்றை உடனடியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்." என்று அன்புமணியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com