கே.வி. தங்கபாலு
கே.வி. தங்கபாலு

காங். தலைவர் கொலை வழக்கு... விசாரணைக்கு ஆஜரான கே.வி. தங்கபாலு கொடுத்த விளக்கம்!

ஜெயக்குமார் எழுதிய கடிதத்தில் என்னைப் பற்றி கூறிய தகவல் அனைத்தும் முற்றிலும் பொய்யானது, உண்மைக்குப் புறம்பானது என நெல்லையில் கேவி.தங்கபாலு தெரிவித்துள்ளார்.

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் கொலை தொடர்பான வழக்கில், 30க்கும் மேற்பட்ட நபர்களுக்கு காவல்துறையினர் சம்மன் வழங்கி, அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். அதன் அடிப்படையில் முன்னாள் காங்கிரஸ் தலைவரான தங்கபாலுவுக்கு காவல்துறையினர் சம்மன் வழங்கினர்.

இதனை எடுத்து விசாரணைக்கு ஆஜராவதற்காக தங்கபாலு இன்று நெல்லை வந்தார். வண்ணாரப்பேட்டையில் உள்ள தனியார் ஹோட்டலில் வைத்து களக்காடு காவல் ஆய்வாளர் கண்ணன் தலைமையில் தனிப்படை போலீசார் தங்கபாலுவிடம் அரை மணி நேரம் விசாரணை நடத்தினர்.

விசாரணைக்கு பிறகு தங்கபாலு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

“காவல்துறை கேட்ட கேள்விக்கு சரியான பதிலை அளித்துள்ளேன். ஜெயக்குமார் எழுதிய கடிதத்தில் எனக்கு பணம் கொடுத்தார் என்றும் அந்தப் பணத்தை சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரனிடம் பெற்று கொள்ளும்படி கூறியதாக அவர் எழுதி இருக்கிறார். அது முற்றிலும் பொய்யானது உண்மைக்கு புறம்பானது.

எல்லோருக்கும் தெரியும் தேர்தல் காலத்தில் கட்சித் தலைமை அல்லது வேட்பாளர்கள் தான் எல்லா செயல்பாடுகளையும் உதவிகளையும் தேவையான நடைமுறைகளையும் செய்வார்கள். இது காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமல்ல எல்லா கட்சிக்கும் பொருந்தும்.

தமிழக அரசியலில் கடந்த 54 ஆண்டுகளை கடந்திருக்கிறேன். இதுவரை யாரும் என்னிடத்தில் பணம் கொடுத்ததாக நான் வாங்கிக் கொண்டதாக எந்த குற்றச்சாட்டும் என்மீது இல்லை. பணம் வாங்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. பணம் சம்பந்தமான விவகாரங்களை நான் கவனிக்கவும் இல்லை.

தேர்தலில் அனைவரையும் ஒருங்கிணைக்க வேண்டிய பணி என்னுடைய பணியாக இருந்தது. அதை நான் சிறப்பாக செய்தேன். தேர்தல் பணிகளை பற்றி நடைமுறையில் இருக்கும் பிரச்சனைகளை பற்றி வெளியில் பேச முடியாது. இந்த மரணம் துரதிஷ்டவசமானது. ஆனால் ஜெயக்குமார் எழுதிய கடிதத்தில் என்னைப் பற்றிய செய்திகள் அனைத்தும் உண்மைக்கு புறம்பானவை. அதை நான் மறுக்கிறேன் அதற்கான எந்த ஆதாரத்தையும் யாரும் காட்ட முடியாது என்பதையும் அழுத்தமாக கூறிக் கொள்கிறேன்.

நானே எனது வாக்குமூலத்தை கடிதமாக எழுதி காவல்துறையிடம் கொடுத்திருக்கிறேன். விசாரணை சரியான முறையில் நடைபெறுகிறது. மூன்று நாட்களுக்கு முன்னர் காவல் ஆய்வாளர் என்னை தொடர்பு கொண்டு விசாரணைக்கு வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அவருடைய வேண்டுகோள் ஏற்று எனது கடமையை நான் நிறைவேற்றி இருக்கிறேன். மீண்டும் விசாரணைக்கு அழைப்பது குறித்து காவல்துறை என்னிடம் எதுவும் கூறவில்லை. எப்போது விசாரணை என்றாலும் நான் எனது முழு ஒத்துழைப்பை வழங்குவேன்.” என்று தங்கபாலு கூறினார்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com