தொகுதி மறுவரையறை விவகாரத்தில் தி.மு.க. கருப்புக்கொடி போராட்டத்தை அறிவித்துள்ளது. அதை காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் வரவேற்றுள்ளன.
முன்னதாக, இன்று காலையில் பிரச்சாரப் பரபரப்புக்கு இடையே, தி.மு.க. எம்.பி.களுடன் தொகுதி மறுவரையறை குறித்து அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் வெளியிட்ட சமூக ஊடகப் பதிவில், “ தொகுதி மறுவரையறை: தலைக்கு மேல் தொங்கிய கத்தி கழுத்துக்கு வந்துவிட்டது!” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ”நாடு முழுக்க உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களை ஒருங்கிணைத்து இந்த பேராபத்தை எதிர்கொள்வதற்கான வியூகங்கள் குறித்து கழக நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் ஆலோசித்துள்ளேன்.
தனிப்பட்ட மனிதர்கள் - அரசியல் இயக்கங்களைவிட, மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதுதான் நமது தலையாய கடமை. எனவே, அனைத்து அரசியல் இயக்கங்களைச் சார்ந்த தோழர்களும் - நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஜனநாயகத்தைக் காக்க ஓரணியில் திரள வேண்டும் என அழைக்கிறேன்.” என்று மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.
அதைத் தொடர்ந்து காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் ஆகியோர் வெளியிட்ட தனித்தனி அறிக்கைகளில், கருப்புக்கொடி போராட்டத்தில் தத்தம் கட்சிகளும் பங்கேற்கும் என அறிவித்துள்ளனர்.