
காங்கிரஸ் கட்சிக்காரர்களுக்கு வந்தே மாதரம் என்று சொல்வது மட்டுமல்ல, திருப்பி அடிக்கவும் தெரியும் காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் கூறியுள்ளார்.
மதுரை வடக்கு தொகுதியில் காங்கிரஸ் கட்சிக்கும், திமுகவினருக்குமிடையே கூட்டணி சண்டை சூடுபிடித்துள்ளது. மூன்று நாட்களுக்கு முன் மொழிப்போர் தியாகிகள் நிகழ்வு ஒன்றில் பேசிய மதுரை வடக்கு தொகுதி எம்.எல்.ஏ-வும் மாவட்ட செயலாளருமான கோ.தளபதி, “காங்கிரஸ் கட்சியில் மாணிக்கம் தாகூர், ஜோதிமணி இருவரும் எம்.பி ஆகிவிட்டனர். இதனால் மற்றவர்கள் எம்.எல்.ஏ ஆகவில்லையென்றாலும் பரவாயில்லை என அதில் பங்கு கொடு இதில் பங்கு கொடு என கேட்கிறார்கள்.
இதையெல்லாம் நம்முடைய தலைமை புரிந்து கொண்டு இவர்களுக்கு சீட்டே கொடுக்க கூடாது. நாம் கொடுக்க விட கூடாது. காங்கிரஸ் கட்சியினருக்கு தொகுதிக்கு 3000, 4000 ஓட்டுகள் தான் இருக்கிறது. பூத் கமிட்டி போட கூட ஆள் இல்லாதவர்கள் ஆட்சியில் பங்கு கேட்கிறார்கள். அவர்களுக்கு அதிக அளவு பங்கு கொடுக்க கூடாது" என பேசியது சர்ச்சையை கிளப்பியது.
இதயடுத்து எம்.பி மாணிக்கம் தாகூர் தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில், "இந்த முறை மதுரை வடக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் நிற்க வேண்டும் என்று அன்புத் தலைவர் கார்கேவிடம் கோரிக்கை வைப்பேன். தன்மானம் காக்க சிலருக்கு பாடம் புகட்ட வேண்டும். அதிகார திமிருடன் இருந்தால் தோழமை கட்சிகள் அமைதியாக இருக்கும் காலம் முடிந்துவிட்டது" என பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில் நேற்று மதுரை வடக்கு தொகுதியில் “காங்கிரஸ் கட்சிக்கு வாக்களியுங்கள்” என போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தது மேலும் சலசலப்பை உருவாக்கியது. தொடர்ந்து இன்று திருப்பரங்குன்றத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் செய்தியாளர்களை சந்தித்து பேசும் போது,"எங்களை பற்றி அவதூறாக பேசிய திமுக மாவட்ட செயலாளர் மீது மூன்று நாட்களாக நடவடிக்கை எடுக்கவில்லை, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எனக்கு சீட் கிடைக்கிறது, ஜோதிமணிக்கு சீட் கிடைக்கிறது என்பதெல்லாம் பிரச்னை இல்லை ஆனால் அதை தாண்டி பூத் கமிட்டிக்கு ஆள் இல்லை, வாக்குகள் இல்லை என பேசுவதெல்லாம் வன்மம் மிகுந்தது. இதை கடுமையாக எதிர்ப்போம். அதிகார மமதையில் பேசுகிறார் திமுக மாவட்ட செயலாளர்.
இளைஞர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் போஸ்டர் ஒட்டியிருக்கிறார்கள். அவர்களுக்கு என்னுடைய பாராட்டுகள் நான் அவர்களோடு இருப்பேன்.
காங்கிரஸ் கட்சியை யாரெல்லாம் அவமானப்படுத்துகிறார்களோ, இழிவாக பேசுகிறார்களோ அவர்களிடம் எந்தவொரு தயவு தாட்சண்யமும் பார்க்கப் போவதில்லை. எங்களைப் பொறுத்தவரை காங்கிரஸ் கட்சியின் தன்மானம் மிக முக்கியமானது.
காங்கிரஸ் கட்சிக்காரர்களுக்கு வந்தே மாதரம் என்று சொல்வது மட்டுமல்ல, திருப்பி அடிக்கவும் தெரியும். காங்கிரஸ் குறித்து பேசிய திமுக சட்டமன்ற உறுப்பினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்றார்.