பத்ரி சேஷாத்ரி விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட போது.
பத்ரி சேஷாத்ரி விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட போது.

கைதான பத்ரி சேஷாத்ரிக்கு 15 நாள் காவல்! நீதிமன்றம் உத்தரவு!

மணிப்பூர் வன்முறை தொடர்பாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியை விமர்சித்த விவகாரத்தில் கிழக்கு பதிப்பகத்தின் பதிப்பாசிரியரும் பதிப்பாளருமான பத்ரி சேஷாத்ரி கைது செய்யப்பட்டார். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு முன் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில், அவருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன் பின் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட அவருக்கு ஆகஸ்ட் 11 வரை காவலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

மணிப்பூர் வன்முறை தொடர்பாக ஆதன் டிவி விவாதத்தில் "மணிப்பூர் வன்முறைக்குக் காரணம் அம்மாநில உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு தான். மணிப்பூர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் கருத்து கூறியுள்ளது. இதில் தலைமை நீதிபதி சந்திரசூட் என்ன செய்ய முடியும்? உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் துப்பாக்கியைக் கொடுத்து மணிப்பூர் அனுப்பி வைக்கலாம்" என்று பேசியிருந்தார்.

இது குறித்து பெரம்பலூர் சேர்ந்த வழக்கறிஞர் கவியரசு அளித்த புகாரின் பேரில் பெரம்பலூர் காவல்துறையினர் அவரை இன்று காலை சென்னையில் வைத்து கைது செய்தது. மேலும், பத்ரி சேஷாத்ரி மீது குன்னம் காவல்துறை 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

அவர் கைதுக்கு கண்டனம் தெரிவித்துள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, "புகழ்பெற்ற பதிப்பாளர், மேடைப் பேச்சாளர் பத்ரி சேஷாத்ரியை தமிழக காவல்துறை இன்று அதிகாலை கைது செய்துள்ளதை தமிழக பாஜக வன்மையாகக் கண்டிக்கிறது.

சாமானிய மக்களின் கருத்துக்களை எதிர்கொள்ள திராணியற்று கைது நடவடிக்கையை மட்டுமே நம்பி இருக்கிறது இந்த ஊழல் திமுக அரசு. ஊழல் திமுக அரசின் பழிவாங்கும் நடவடிக்கைகளை செயல்படுத்துவது ஒன்று மட்டும் தான் தமிழக காவல்துறையின் பணியா?" என்று பதிவிட்டுள்ளார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com