ராமதாஸ்
ராமதாஸ்

மூடு விழாவை நோக்கி கூட்டுறவு சங்கங்கள்! – ராமதாஸ் எச்சரிக்கை

தமிழ்நாட்டில் உள்ள கூட்டுறவு சங்கங்கள் கடுமையான நிதி நெருக்கடியில் இருப்பதாக பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

“தமிழ்நாட்டில் உள்ள கூட்டுறவு சங்கங்களுக்கு அரசு வழங்க வேண்டிய நிதியை வழங்காததால், அவை கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் நிலையில், கூட்டுறவு சங்கங்களின் மனித வளத்தையும், நிதியையும் உறிஞ்சக் கூடிய வகையிலான திட்டங்களை செயல்படுத்த அரசு கட்டாயப்படுத்தி வருகிறது. கூட்டுறவு சங்கங்களின் இயக்கத்தையே நிறுத்தக்கூடிய இந்த அணுகுமுறையை ஏற்றுக்கொள்ள முடியாது.

ஒரு நாட்டின் வளர்ச்சிக்கும், ஒரு மாநிலத்தின் வளர்ச்சிக்கும் மிகவும் இன்றியமையாதவை கூட்டுறவு அமைப்புகள் ஆகும். ஆனால், தமிழ்நாட்டில் கூட்டுறவு அமைப்புகள் மூடுவிழாவை நோக்கி பயணிக்கின்றன. அதற்குக் காரணம் தமிழக அரசின் தவறான அணுகுமுறை தான். தமிழ்நாட்டில் கடந்த 2021, 2022 ஆகிய ஆண்டுகளில் பயிர்க்கடன் தள்ளுபடி நகைக்கடன் தள்ளுபடி, மகளிர் சுய உதவிக்குழு கடன் தள்ளுபடி ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. நகைக்கடன், மகளிர் கடனாக ரூ.7573 கோடி தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், அதில் ரூ.3415 கோடியை மட்டுமே தமிழக அரசு திரும்பக் கொடுத்திருக்கிறது. இன்னும் ரூ.4158 கோடி கடன் தொகையை திரும்பத் தர வேண்டியுள்ளது. பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டதில் இன்னும் ரூ.5000 கோடிக்கும் மேல் அரசிடமிருந்து திரும்பப் பெற வேண்டியுள்ளது. கூட்டுறவு சங்கங்களின் நிதி சுமார் ரூ.10,000 கோடி திரும்ப வராததால் அவற்றின் செயல்பாடுகள் முடங்கியுள்ளன.

இத்தகைய சூழலில் கூட்டுறவு சங்கங்களை பல்சேவை மையங்களாக மாற்றி, விவசாய உள்கட்டமைப்பு திட்டத்தின்கீழ் டிராக்டர், அறுவடை எந்திரம், கரும்பு வெட்டும் எந்திரம், சரக்குந்துகள் ஆகியவற்றை உழவர்களுக்கு குறைந்த வாடகையில் வழங்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று தமிழக அரசு கட்டாயப்படுத்தி வருகிறது. போதிய முன்னேற்பாடுகளும், முதலீடுகளும், கட்டமைப்பு வசதிகளும் இல்லாமல் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தால் கூட்டுறவு சங்கங்கள் மிகக் கடுமையாக பாதிக்கப்படும்.

உழவர்களுக்கு டிராக்டர், அறுவடை எந்திரம், கரும்பு வெட்டும் எந்திரம், சரக்குந்துகள் ஆகியவற்றை குறைந்த வாடகையில் வழங்கும் திட்டம் வரவேற்கப்பட வேண்டிய திட்டம் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. இன்னும் கேட்டால் 2016-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின் போதே இந்தக் கருவிகள் உழவர்களுக்கு வாடகையின்றி இலவசமாக வழங்கப்படும் என்று பாட்டாளி மக்கள் கட்சி வாக்குறுதி அளித்திருந்தது. இப்போதும் இந்தத் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்துவதில் எந்த தவறும் இல்லை. ஆனால், வெறுங்கைகளால் முழம் போடுவது போல அதை செயல்படுத்தும் விதம் தான் தவறானதாகும்.

உழவர்களுக்கு வேளாண் கருவிகளை வாடகைக்கு வழங்க விரும்பும் தமிழக அரசு, அவற்றை அதன் சொந்த நிதியில் கொள்முதல் செய்து கூட்டுறவு அமைப்புகளுக்கு வழங்கியிருக்க வேண்டும்; அவற்றை கையாளுவதற்கான பணியிடங்களை உருவாக்கி, அதற்கான தொடர் செலவினங்களை அரசு வழங்கியிருக்க வேண்டும். ஆனால், இவை எதையும் செய்யாத அரசு, கூட்டுறவு சங்கங்கள் அவற்றின் சொந்த செலவில் இந்தக் கருவிகளை வாங்கி வாடகைக்கு விட வேண்டும் என்று கட்டாயப்படுத்துவது தான் சிக்கலாகும்.

தமிழ்நாட்டில் உள்ள சுமார் 4500 கூட்டுறவு சங்கங்களில் 2500 சங்கங்கள் பல ஆண்டுகளாகவே இழப்பில் தான் இயங்கி வருகின்றன. கடந்த இரு ஆண்டுகளில் தள்ளுபடி செய்யப்பட்ட கடன்களுக்கான நிதி சுமார் ரூ.10,000 கோடியை அரசு இன்னும் வழங்காததால் மேலும் பல நூறு கூட்டுறவு சங்கங்கள் இழப்பில் செயல்படத் தொடங்கியுள்ளன. அவற்றில் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குவதற்குக் கூட நிதி இல்லாத நிலையில், வேளாண் கருவிகளை வாங்குவதற்கு அந்த சங்கங்கள் எங்கே போகும்? மத்தியக் கூட்டுறவு வங்கிகளிடமிருந்து கடன் பெற்று வேளாண் கருவிகளை வாங்கினால், அவற்றை வாடகைக்கு விடுவதன் மூலம் கிடைக்கும் வருமானம் அவற்றைக் கையாளும் பணியாளர்களின் ஊதியத்திற்குக் கூட போதுமானதாக இருக்காது. அதனால் ஒரு சில ஆண்டுகளில் அந்த கூட்டுறவு சங்கங்கள் கடனில் மூழ்கி மூடப்படும் நிலை உருவாகும். அதனால் பல்லாயிரம் பணியாளர்கள் வேலை இழக்க நேரிடும்.

கூட்டுறவு சங்கங்களை பல்சேவை மையங்களாக மாற்றும் திட்டத்தால் ஏற்படும் ஆபத்துகளை சுட்டிக் காட்டி, கூட்டுறவு சங்க பணியாளர் அமைப்புகள் கடந்த சில வாரங்களில் இரு முறை போராட்டம் நடத்தின. ஆனாலும், இந்தத் திட்டத்தைத் திணிப்பதில் தமிழக அரசு உறுதியாக இருக்கிறது. கூட்டுறவு சங்கங்கள் உழவர்களுக்கு கடன் வழங்குவதற்காக ஏற்படுத்தப்பட்டவை. அதை விடுத்து அவற்றை வாடகைக்கு கருவிகளை வழங்கும் அமைப்புகளாக மாற்றக் கூடாது. இது கூட்டுறவின் நோக்கத்தை சிதைத்து விடும்.

எனவே, வேளாண் கருவிகளை அரசே அதன் செலவில் கொள்முதல் செய்ய வேண்டும். அவற்றை வாடகைக்கு கொடுப்பதற்காக தனிப்பிரிவை ஏற்படுத்த வேண்டும். கூட்டுறவு சங்கங்கள் அவற்றின் இப்போதைய வடிவில் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும். தள்ளுபடி செய்யப்பட்ட கடனுக்காக வழங்க வேண்டிய ரூ.10,000 கோடியை கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்கி அவை முழு அளவில் செயல்படவும், அனைத்து சங்கங்களும் லாபம் ஈட்டும் நிலையை உருவாக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com